வேகமாக வளர்ந்து வரும்சேவை மருத்துவர் வீட்டிற்கே வந்து அடிப்படை சிகிச்சை

 

உணவு, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை சில நிமிடங்களிலேயே வீட்டிற்கே கொண்டு வந்து வழங்கும் சேவைகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அடுத்தகட்டமாக மருத்துவச் சேவைகளும் வீடு தேடி வரும் நடைமுறை பல நகரங்களில் அதிகரித்து வருகிறது.

போன் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்தால், 20 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவர் வீட்டிற்கே வந்து அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் சேவைகளை பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்து ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை அளவு, ஆக்சிஜன் அளவு, உடல் வெப்பநிலை உள்ளிட்ட அடிப்படைப் பரிசோதனைகளை மேற்கொள்ள தேவையான கருவிகளுடன் மருத்துவர்கள் வீட்டிற்கு வருகின்றனர். தேவையான மருந்துகளையும் சில சேவை நிறுவனங்கள் வழங்குகின்றன.

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் செயல்பட்டு வரும் டாக்ஹோம் போன்ற நிறுவனங்கள் மருத்துவர்களை வீட்டிற்கே அனுப்பும் சேவையை விரிவுபடுத்தி வருகின்றன. இதேபோல் கைனோ ஹெல்த், டாக்ஹோம், டாக்டர் தாத்தா உள்ளிட்ட நிறுவனங்களும் வீட்டிலேயே மருத்துவ ஆலோசனை மற்றும் அடிப்படை சிகிச்சை வழங்கும் சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன.

வயதானவர்கள், குழந்தைகள், நடமாடுவதில் சிரமம் உள்ளவர்கள் மற்றும் மருத்துவமனைக்குச் செல்ல நேரமில்லாதவர்களுக்கு இந்தச் சேவை பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக காய்ச்சல், சளி, இருமல், சிறிய தொற்றுகள் மற்றும் அவசரமற்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே ஆரம்பகட்ட மருத்துவ ஆலோசனையைப் பெற முடிகிறது.

மருத்துவமனைகளில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்ப்பதுடன், நோயாளியின் வழக்கமான வீட்டுச் சூழலிலேயே மருத்துவர் பரிசோதனை மேற்கொள்வதும் இந்தச் சேவையின் முக்கிய அம்சமாக உள்ளது. குறிப்பாக முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவமனைக்குச் செல்வதால் ஏற்படும் சிரமங்களை இது குறைக்கிறது.

எனினும், வீடு தேடி வரும் மருத்துவர் சேவை அனைத்து மருத்துவ அவசரநிலைகளுக்கும் மாற்றாக இருக்காது. மாரடைப்பு அறிகுறிகள், கடுமையான மூச்சுத்திணறல், பக்கவாதத்தின் அறிகுறிகள், அதிக ரத்தப்போக்கு, சுயநினைவு இழப்பு போன்ற தீவிர நிலைகளில் தாமதிக்காமல் மருத்துவமனை அல்லது அவசர சிகிச்சைப் பிரிவை அணுகுவது அவசியம்.

தொழில்நுட்ப வளர்ச்சி, செயலி வழி முன்பதிவு மற்றும் வீட்டிலேயே மேற்கொள்ளக்கூடிய மருத்துவப் பரிசோதனை வசதிகள் அதிகரித்து வருவதால், ‘மருத்துவமனைக்குச் செல்வது’ என்ற வழக்கமான முறையுடன் ‘மருத்துவர் வீட்டிற்கு வருவது’ என்ற புதிய முறையும் இணைந்து வளர்ந்து வருகிறது. வரும் ஆண்டுகளில் ஹோம் ஹெல்த்கேர் துறை மேலும் விரிவடைந்து, நகர்ப்புறங்களில் அன்றாட மருத்துவச் சேவையின் முக்கிய பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.