உலக வரலாற்றில் இந்தியாவின் பரிணாம வளர்ச்சி மற்றும் புதிய வியூகங்கள்

 

உலக வரலாற்றில் சில நிகழ்வுகள் ஒரு நாட்டின் ஆன்மாவில் ஆறாத வடுக்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி, அதன் எதிர்காலப் பாதுகாப்புப் பாதையையும் மீளமுடியாதவாறு மாற்றி அமைத்துவிடுகின்றன.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் அத்தகைய ஒரு சர்வதேச அதிர்வலையை ஏற்படுத்திய நிகழ்வாகும். ஒரு சாதாரண காலை வேளையில், அல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்த 19 பயங்கரவாதிகள் நான்கு பயணிகள் விமானங்களை ஒரே நேரத்தில் கடத்தினர்.

அவற்றில் இரண்டு விமானங்கள் நியூயோர்க்கின் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீதும், ஒன்று வாஷிங்டன் டி.சியில் உள்ள அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் கட்டடத்தின் மீதும் மோதி விபத்துக்குள்ளாக்கப்பட்டன. நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு வயல்வெளியில் வீழ்ந்து நொறுங்கியது. இரட்டை கோபுரங்கள் நொடிப் பொழுதில் தரைமட்டமாகி, சுமார் 3,000 அப்பாவிப் பொதுமக்கள் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் அமெரிக்க மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

இதன் விளைவாக, வியட்நாம் போருக்குப் பிறகு அமெரிக்கா தனது மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையை ஆப்கானிஸ்தானில் தொடங்கியது. அல்-கொய்தா அமைப்பையும் அதன் முதன்மைத் தலைவன் ஒசாமா பின் லேடனையும் வேட்டையாடத் தொடங்கிய இந்தப் போர் சுமார் 20 ஆண்டுகள் நீடித்தது.

இப்போரின் மூலம் அல்-கொய்தாவின் கட்டமைப்பு பெருமளவில் பலவீனமாக்கப்பட்டதுடன், இறுதியாக 2011 ஆம் ஆண்டு மே மாதம் 2 திகதி பாகிஸ்தானின் ஹபாதாபாத் நகரில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடனை அமெரிக்கச் சிறப்புப் படைகள் தேடிக் கண்டுபிடித்துக் கொன்றன.

 

9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா தனது உள்நாட்டுப் பாதுகாப்பில் தீவிரமான மற்றும் தொலைநோக்கு மாற்றங்களைச் செய்தது. இனி ஒருபோதும் அமெரிக்க மண்ணில் 9/11 போன்றதொரு தாக்குதல் நடக்கக் கூடாது என்ற தீர்க்கமான கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, எல்லைப் பாதுகாப்பும் உள்நாட்டுப் பாதுகாப்பும் முன்னெப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தப்பட்டன.

அமெரிக்காவைப் போலன்றி, இந்திய மண்ணில் பயங்கரவாதம் தசாப்தக் கணக்கில் ஆழமான வடுக்களை ஏற்படுத்திய பிறகே, இந்தியா தனது பொறுமைக்கான எல்லையை எட்டி இனி பொறுப்பதில்லை என்ற இறுதியான நிலைப்பாட்டை எடுத்தது. 1990களின் தொடக்கத்தில் பாகிஸ்தான் இராணுவமும் உளவுத்துறையும் இணைந்து உருவாக்கிய இந்தியாவைக் குருதி வழியச் செய்தல் என்ற மறைமுகப் போர்க் கொள்கையின் காரணமாக, இந்தியா குறிப்பாகக் காஷ்மீர் பிராந்தியத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் உடைமைகளையும் பலிகொடுத்தது. தசாப்தங்களாகத் தொடர்ந்த இந்த மறைமுகப் போரில், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி காஷ்மீரின் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமான பஹல்காமில் நடந்த தாக்குதல் இந்திய மனசாட்சியை உலுக்கியது.

லஷ்கர்- இ -தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் போர்ஸ் நடத்திய இந்தத் கொடூரத் தாக்குதலில் 26 அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலின் போது பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட ஆண்களை அவர்களின் மத அடையாளங்களைக் கேட்டுப் பிரித்தெடுத்து, அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளின் கண்முன்னேயே கொடூரமாகப் படுகொலை செய்தனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் இந்து சுற்றுலாப் பயணிகள்;. மேலும் அவர்களைக் காப்பாற்ற முயன்ற ஒரு உள்ளூர் முஸ்லிம் குதிரை ஓட்டுநரும் ஒரு கிறிஸ்தவப் பயணியும் இதில் உயிரிழந்தனர். இச்சம்பவம் இந்திய மக்கள் மனதில் சொல்லொணாச் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

பஹல்காம் கொடூரத்திற்குப் பதிலடியாக, 2025 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தானுக்குள் ஆபரேஷன் சிந்தூர் என்ற பிரம்மாண்ட இராணுவ நடவடிக்கையைத் தொடங்கின. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் சகிப்புத்தன்மை முடிவுக்கு வந்துவிட்டது என்பதை இது உலகிற்கு உரக்கச் சொன்னது. வெறும் 96 மணி நேரத்திற்குள், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த ஒன்பது முக்கிய பயங்கரவாதப் பயிற்சி முகாம்களை இந்தியப் படைகள் துல்லியமான தாக்குதல்கள் மூலம் முற்றிலுமாக அழித்தொழித்தன.

இந்தியாவின் இந்த அதிரடித் தாக்குதலால் நிலைதடுமாறிய பாகிஸ்தான் இராணுவத்தின் முக்கிய விமானத் தளங்கள் மற்றும் ரேடார் நிலையங்கள் உள்ளிட்ட இராணுவ இலக்குகளையும் இந்திய ஆயுதப் படைகள் தாக்கி அழித்தன. இதனால் பாகிஸ்தான் வேறு வழியின்றிப் போர் நிறுத்தத்தைக் கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டது. 9/11 மற்றும் பஹல்காம் தாக்குதல்களுக்கு இடையே 24 ஆண்டுகள் இடைவெளி இருந்தாலும், பயங்கரவாதத்தை அதன் வேரிலேயே சென்று அழிப்போம் என்ற இரு நாடுகளின் தீர்க்கமான முடிவை இவை பிணைக்கின்றன. ஆனால், பஹல்காம் தாக்குதல் சோகமாக உணர்த்தியது போல, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் இன்னும் முழுமையாக வெல்லப்படவில்லை.

மாறிவரும் பயங்கரவாதத்தின் வடிவமும் அதிநவீன சவால்களும்

கடந்த கால் நூற்றாண்டில் உலகளவில் பயங்கரவாதத்தின் வடிவமும் அது பயன்படுத்தும் கருவிகளும் முற்றிலும் மாறுபட்டுள்ளன. அல்-கொய்தா அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பாரம்பரியமான, ஒரே மையக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய பெரிய அமைப்புகளுக்குப் பதிலாக, தற்காலப் பயங்கரவாதிகள் சிறிய, சுயாட்சி கொண்ட பரவலாக்கப்பட்ட குழுக்களாக உருவெடுத்துள்ளனர்.

தனியொருவன் தாக்குதல்கள் தற்போது உலகளவில் அதிகளவில் நிகழும் நடைமுறையாக மாறியுள்ளன. ட்ரோன்கள், இணையவழித் தாக்குதல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயங்கரவாத அமைப்புகள் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. மின்சாரம், வங்கி மற்றும் நிதி அமைப்புகள் போன்ற ஒரு நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் மறைமுக இணைய தாக்குதல்கள், மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நேரடித் தாக்குதல்களுக்கு இணையான அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

முறையான பயிற்சி முகாம்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்புக்கு மாற்றாக, சமூக ஊடகங்கள், தகவல்தொடர்புகள் மற்றும் கிரிப்டோகரன்சி உட்பட அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலமாக பயங்கரவாதம் பரப்பப்படுகிறது.

ஒரு நாட்டின் நிலப்பரப்பைக் கைப்பற்றுவதைக் காட்டிலும், அந்நாட்டின் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதும், பொருளாதாரத்தைக் குருதி வழியச் செய்வதுமே தற்போதைய பயங்கரவாதத்தின் முதன்மை நோக்கமாக உள்ளது.

இதனால், பயங்கரவாதத்திற்கு எதிரான வியூகங்களும் வெறும் இராணுவ நடவடிக்கையாக மட்டும் இல்லாமல், உளவுத்துறை ஒருங்கிணைப்பு, நிதி கண்காணிப்பு, எல்லைக் கட்டுப்பாடு, இணைய கண்காணிப்பு மற்றும் தீவிரவாத ஒழிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான அரசுக் கொள்கையாக மாற்றமடைந்துள்ளன. இராணுவ நடவடிக்கை தேவைப்படும் போது, அது அதிநவீன ஆயுத தளங்கள் மூலம் நடத்தப்படும் துல்லியமான செயல்பாடுகளாக உருவெடுக்கிறது.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் ஆரம்பத்தில் பெரும் சவால்கள் நிறைந்ததாக இருந்தது. ஆரம்பக் காலத்தில், பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் பதிலடி என்பது எல்லைப் பகுதியில் தற்காப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பது, தூதரக உறவுகளைத் தற்காலிகமாகத் துண்டிப்பது மற்றும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுப்பதோடு நின்றுவிட்டது.

ஆனால் 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 திகதி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட போது, பொதுமக்களின் உயிரைக் காக்க அகமது ஒமர் ஷேக் மற்றும் மசூத் அசார் உள்ளிட்ட பயங்கரவாதிகளை விடுவிக்க இந்தியா கட்டாயப்படுத்தப்பட்டது.

விடுவிக்கப்பட்ட மசூத் அசார், ஜெய்ஷ்-ஏ-முஹம்மது அமைப்பைத் தொடங்கி 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி இந்திய பாராளுமன்றத்தின் மீதே தாக்குதல் நடத்தினான். அதற்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் பராக்ரம் மூலம் எல்லைக்கு முழு இராணுவத்தையும் அனுப்பிய போதிலும், தீவிர நடவடிக்கை ஏதுமின்றி படைகள் திரும்பப் பெறப்பட்டன.

2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 திகதி நடந்த மும்பைத் தாக்குதல் இந்தியாவின் பாதுகாப்புக் கட்டமைப்பில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இத்தாக்குதலுக்குப் பிறகு உள்நாட்டுப் பாதுகாப்பைப் பலப்படுத்தத் தேசிய புலனாய்வு பிரிவு உருவாக்கப்பட்டது.

மேலும் உளவு அமைப்புகளின் ஒருங்கிணைப்பிற்காக மத்திய நிலையம் வலுப்படுத்தப்பட்டு, கடலோரப் பாதுகாப்பின் முழுப் பொறுப்பும் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இருப்பினும், 2014 வரை இந்தியாவின் பெரும்பாலான நடவடிக்கைகள் தற்காப்பு சார்ந்ததாகவே இருந்தன. 2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகே இந்தியாவின் போர்க்கோட்பாட்டில் தீர்க்கமான மாற்றம் ஏற்பட்டது. 2016 உறித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவம் எல்லையைக் கடந்து நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக் மற்றும் 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய வான்படை பாகிஸ்தானின் பாலகோட் பகுதிக்குள் புகுந்து நடத்திய வான்வழித் தாக்குதல் ஆகியவை இந்தியாவின் புதிய இராணுவ நிலைப்பாட்டை உலகுக்கு உணர்த்தின.

 

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிக்க ஒபரேஷன் சிந்தூர் போன்ற தற்காலிக இராணுவ நடவடிக்கைகள் மட்டும் போதாது என்பதை உணர்ந்த இந்தியா, பயங்கரவாதத்திற்கு எதிரான தனது முதலாவது விரிவான தேசியக் கொள்கையான ‘பிரஹார்’ என்ற கொள்கையை 2026 பிப்ரவரி மாதம் 23 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

இக்கொள்கை முழு அரசு மற்றும் முழுச் சமூகம் என்ற ஒருங்கிணைந்த அணுகுமுறையின் கீழ் செயல்படுகிறது. இக்கொள்கையானது பயங்கரவாத அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்தல், தாக்குதல்கள் நடந்தால் அதிவிரைவான பதிலடி கொடுத்தல், மத்திய மற்றும் மாநில பிரிவுகளை ஒரே கூரையின் கீழ் இணைத்து உளவுத் தகவல்களைப் பகிர்தல், சட்டரீதியான தடைகளை ஏற்படுத்துதல், இளைஞர்கள் தீவிரவாதப் பாதையில் செல்வதைத் தடுத்தல், சர்வதேச நாடுகளுடன் இணைந்து பயங்கரவாத நிதியுதவியைத் தடுத்தல் மற்றும் இணையம்;, ட்ரோன் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இயங்குகிறது. இதன் மூலம் இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிரான தனது தற்காப்பு அணுகுமுறையிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, தாக்குதல் மற்றும் தடுப்பு சார்ந்த புதிய பாதுகாப்புப் சகாப்தத்திற்குள் நுழைகிறது.

இந்தியப் பெருங்கடலின் மிக முக்கிய வியூக மையத்தில் அமைந்துள்ள தீவு நாடான இலங்கைக்கு, எல்லை தாண்டிய மற்றும் கடல்வழி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வலுவான பாதுகாப்பு வியூகம் அவசியமாகிறது. 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் கடல்சார் குற்றங்கள் இலங்கையின் உள்நாட்டுப் பாதுகாப்பில் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக, இலங்கை தனது தேசியப் பாதுகாப்புக் கட்டமைப்பை விரிவாக மறுபரிசீலனை செய்து நவீனமயமாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இலங்கையின் எதிர்காலப் பாதுகாப்புத் தயார்படுத்தல்கள் முக்கியமாக மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதில் முதலாவதாக கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முக்தியத்துவம் பெறுகிறது. பரந்த பிரத்தியேக பொருளாதார மண்டலத்தைக் கொண்ட இலங்கை, கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையை நவீன ட்ரோன்கள், செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் அதிவேகப் படகுகள் மூலம் வலுப்படுத்த வேண்டும். கடல்வழியாக நிகழும் போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல் மற்றும் கடல்சார் பயங்கரவாத ஊடுருவல்களைத் தடுப்பதே இதன்காரணமாகும்.

இரண்டாவதாக உளவுத்துறை ஒருங்கிணைப்பு மற்றும் நிதிச் சட்டம். 2026 ஆம் ஆண்டில் இலங்கை மேற்கொண்டுள்ள இலக்கு வைக்கப்பட்ட நிதி தடைகள் மற்றும் தீவிரவாத நிதியளிப்பு எதிர்ப்புச் சட்டங்கள் போல, பயங்கரவாத அமைப்புகளின் நிதி வளத்தை முடக்கும் சட்டக் கட்டமைப்புகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும், தேசிய புலனாய்வு அமைப்புகளுக்கு இடையே உடனடித் தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்ய வேண்டும். மூன்றாவதாக பிராந்திய உளவுத்துறை ஒத்துழைப்பு என்பது இன்றியமையாததாகும். இந்தியா மற்றும் பிற அயல் நாடுகளுடன் இணைந்து கூட்டு உளவுத்துறை பகிர்வு மற்றும் இணைய பாதுகாப்பு உத்திகளை வலுப்படுத்துவது இலங்கையின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமாகும்.ட்ரோன் மற்றும் இணையவழிக் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இராணுவப் பிரிவுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவது இலங்கையின் எதிர்காலப் பாதுகாப்பு ஆயத்தங்களுக்கு அவசியமான தேவையாகும்.

9/11 தாக்குதல் நடந்து 25 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில், உலகிற்கு கிடைக்கும் பாடம் என்னவென்றால், பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதா என்பது கேள்வி அல்ல, மாறாக எதிர்கால அச்சுறுத்தல்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்தும் திறனை நாடுகள் பெற்றுள்ளனவா என்பதே ஆகும்.

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய கொடூரத் தாக்குதல் உணர்த்துவது போல, எவ்வளவுதான் பலமிக்க உளவுத்துறையும் இராணுவ பலமும் இருந்தாலும், ஒரேயொரு பாதுகாப்புத் தவறு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திவிடும். இந்தியாவைப் பொறுத்தவரை, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பது 9/11க்கு முன்பிருந்தே தொடர்வது. கால் நூற்றாண்டுக்குப் பிறகும் அந்தப் போர் ஓயவில்லை ஆனால், இன்று இந்தியா வெறும் தற்காப்பு நிலையில் இல்லாமல், அரசியல்-இராணுவத் துணிவுடனும், புதிய தடுப்பு வியூகங்களுடனும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக உள்ளது. அதேபோல், இலங்கை போன்ற பிராந்திய நாடுகளும் தனது கடல்சார் மற்றும் இணைய பாதுகாப்பைத் தீவிரமாகப் பலப்படுத்துவதன் மூலமே எதிர்காலப் பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.