பெங்களூர் புதுமணப்பெண் ஹேமாவதிசரவணபெலகோலா கால்வாயில் உடல்

 

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் மாயமான புதுமணப்பெண்ணின் உடல், 8 நாட்களுக்கு பிறகு கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுக்கா சிக்கநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு சிக்கநாயக்கனஹள்ளி அருகே உள்ள ஹேமாவதி கால்வாய் பகுதிக்கு புதுமணத் தம்பதி சென்றனர்.

அப்போது பிரியங்கா திடீரென கணவரின் கண் எதிரே அந்த கால்வாயில் குதித்து மாயமானதாக சொல்லப்படுகிறது. இதனால் பதறிய கணவர், மனைவியை காணாமல் பரிதவித்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கால்வாயில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருந்தாலும் பலத்த நீர்வரத்து காரணமாக பிரியங்காவை தேட முடியவில்லை. இந்த நிலையில் மகள் பிரியங்காவை அவரது கணவரே கால்வாயில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர்.

இந்த குற்றச்சாட்டை ராஜசேகரின் பெற்றோர் மறுத்தனர். அப்போது பிரியங்காவுக்கு நன்றாகவே நீச்சல் தெரியும் என அவரது வீட்டாரும், பெண்ணுக்கு ஏற்கெனவே நடந்த ஒரு திருமணத்தை மறைத்துவிட்டதாக ராஜசேகர் குடும்பத்தினரும் மாறி மாறி வாக்குவாதம் செய்துக் கொண்டனர். இந்த நிலையில் ஹேமாவதி கால்வாயில் நீர்வரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று சரவணபெலகோலா அருகே கால்வாயில் பிரியங்காவின் உடல் மிதப்பது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தற்கொலையா, இல்லை கொலையா என்ற கோணத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான ஒரே வாரத்தில் புதுமணப்பெண் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் ஏற்கெனவே நடந்த சம்பவங்களை பார்க்கலாம்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு திருமணமாகி சில வாரங்களே ஆன நிலையில் கணவருடன் வெளியே சென்ற போது மாயமானார். அப்போது அந்த பெண் திடீரென பாலத்தில் இருந்து குதித்துவிட்டதாக கூற, அதை பெண் வீட்டார் மறுத்து, வரதட்சிணை கொடுமையால் மகளை கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டிய நிலையில் அவரது உடல் மூசி நதியின் மதகு பகுதியில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

 

அது போல் ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்று பகுதியில் உள்ள கோயிலுக்கு புதுமணப்பெம் கணவருடன் சென்ற நிலையில், ஆற்று பாலத்தில் பெண் குதித்துவிட்டார். இதை ஏற்க மறுத்த பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். பின்னர் காளிங்கராயன் வாய்க்கால் பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அது போல் கேரள மாநிலம் பாலக்காட்டில் பாரதபுழா ஆற்றில் புதுமணப்பெண் காணாமல் போன நிலையில் மாப்பிள்ளை வீட்டார் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் அந்த பெண் ஒரு வாரம் கழித்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவ்வாறு நிறைய சம்பவங்கள், துயரங்கள் நடந்துள்ளன.