5 தற்காலிக பாலங்களை இலங்கைக்கு வழங்கிய இந்தியா

 

இலங்கைக்கு 250 டன்னுக்கு அதிகமான எடைக் கொண்ட 5 தற்காலிக (பெய்லி பாலம்) பாலங்களை இந்தியா வழங்கியுள்ளது. இலங்கையை கடந்த ஆண்டு டிட்வா புயல் தாக்கியது. இந்த புயலால் பெரும் சேதம் ஏற்பட்டது. புயலால் பாலங்கள் மற்றும் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. ஏற்கனவே, பொருளாதாரப் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கையில், டிட்வா புயல் பேரிடரால் ஏற்பட்ட சேதத்தை சீர்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

டிட்வா புயல் மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவைச் சமாளிக்க இந்தியா ‘ஆபரேஷன் சாகர் பந்து’ திட்டத்தின் கீழ் 450 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.4,050 கோடி) மதிப்பிலான மறுசீரமைப்பு மற்றும் நிதியுதவி தொகுப்பை வழங்கியுள்ளது. இதில் ரூ.3,150 கோடி சலுகைக் கடனும், ரூ.900 கோடி மானியமும் அடங்கும்.

இந்த நிலையில், புயல் மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த போக்குவரத்து இணைப்புகளை மீட்கும் வகையில், இந்தியா 250 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான எடைக் கொண்ட 5 ‘பெய்லி’ பாலங்களை வழங்கியுள்ளது. ஏற்கனவே 2 பெய்லி பாலங்களை வழங்கியுள்ளது. இந்த பாலங்களை இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா, இலங்கை கூட்டுறவு துறை அமைச்சர் உப்பாலி சமரசிங்கேயிடம் நேற்றுமுன்தினம் வழங்கினார் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.