சீட் பெல்ட் அணிய அடம்பிடித்த சிறு குழந்தை..மீண்டும் டெர்மினலுக்குத் திரும்பியவிமானம்

 

குழந்தைகள் தங்களுக்குத் தேவையான ஒன்றை எப்படியாவது அடம்பிடித்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற யுக்தியை எங்கே கற்றுக்கொண்டார்களோ தெரியவில்லை. அந்த வகையில், பெரும்பாலான குழந்தைகள் பெற்றோரிடம் அடம்பிடிப்பதில் கைதேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

விமானம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, “சீட் பெல்ட் போட்டாச்சா?” என்ற கேள்விதான். ஆனால், கனடாவில் ஒரு சிறு குழந்தை சீட் பெல்ட் அணிய அடம்பிடித்ததால் ஒட்டுமொத்த விமானமும் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள விக்டோரியா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டொராண்டோ நோக்கி போர்ட்டர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. விமானம் ஓடுபாதையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அதில் பயணித்த சிறு குழந்தை ஒன்று தனது இருக்கையில் அமராமல் எழுந்து நின்றதாகவும், சீட் பெல்ட் அணிய மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

குழந்தையைப் பாதுகாப்பாக இருக்கையில் அமரவைத்து சீட் பெல்ட் அணிவிக்க பெற்றோரும் விமானப் பணியாளர்களும் பலமுறை முயற்சி செய்துள்ளனர். ஆனால், அந்தக் குழந்தை யாருடைய பேச்சையும் கேட்காமல் தொடர்ந்து அடம்பிடித்ததாகக் கூறப்படுகிறது.

விமானப் பாதுகாப்பு விதிகளின்படி, குழந்தையைப் பாதுகாப்பாக இருக்கையில் அமரவைக்க முடியாததால் விமானத்தைத் தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விமானம் மீண்டும் டெர்மினலுக்குத் திரும்பியுள்ளது.

தொடர்ந்து, குழந்தையையும் அவரது பெற்றோரையும் அவர்களது உடைமைகளுடன் விமானத்தில் இருந்து இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், குழந்தை மற்றும் பெற்றோரை இறக்கிவிட்டு மீண்டும் விமானத்தை இயக்குவதற்குள் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டது.

விக்டோரியா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை இயக்க நேரம் இரவு 12.30 மணியுடன் முடிவடைவதால், அதற்குள் விமானத்தை மீண்டும் இயக்க முடியவில்லை. இதனால், அந்த விமானத்தை அன்றைய தினம் தொடர்ந்து இயக்க முடியாமல் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கிவிடப்பட்டனர். அவர்களுக்கு மறுநாள் டொராண்டோ செல்லும் மற்றொரு விமானத்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தச் சம்பவத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு போர்ட்டர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. ஒரு சிறு குழந்தையின் அடம்பிடிப்பின் காரணமாக ஒட்டுமொத்த விமானமே ரத்து செய்யப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதே நேரத்தில், சிறு குழந்தையாக இருந்தாலும் விமானத்தில் பயணிக்கும் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்பதையும் இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.