இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகள் எளிதாக நாடு திரும்ப நடவடிக்கை

: புதிய குடியேற்ற விதிகள் அறிமுகம்
இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது பலரும் பாஸ்போர்ட் உள்ளிட்ட முறையான பயண ஆவணங்கள் இன்றி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தனர். அவர்களில் பலர் நாடு திரும்ப விரும்பினாலும் பல்வேறு சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்நிலையில், இலங்கை அகதிகள் நாடு திரும்புவதை எளிதாக்க புதிய குடியேற்ற நடைமுறைக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. இது இலங்கை அகதிகள் எதிர்கொள்ளும் சட்ட சிக்கல்களை நீக்குவதை நோக்கமாக கொண்டதாக அமைச்சரவை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.Geographic Reference

இந்த புதிய நடைமுறையின்படி, மே 19, 2009க்கு முன் நாட்டைவிட்டு வெளியேறிய இலங்கை மக்கள், கொலை, தேச துரோகம் அல்லது பிற குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகவில்லை என்பதை உறுதிப்படுத்த இலங்கை அரசின் உளவுத்துறையால் பரிசோதிக்கப்படுவார்கள். இதில் தகுதி பெறுபவர்கள், சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாமல், தற்காலிக பாஸ்போர்ட் மூலம் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையின் உதவியுடன் கடந்த 2002 முதல் 2022 வரையிலும் இந்தியாவிலிருந்து 18,000 இலங்கை அகதிகள் தாமாக தாய்நாட்டிற்கு திரும்பியுள்ளனர். 2009 ஜனவரி முதல் 2025 ஜூன் வரையிலான காலகட்டத்தில் 18,500க்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பியுள்ளதாக கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசு அறிவித்தது. 2026 நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களுக்கு உள்ளேயும், வெளியேயும் சுமார் 89,000 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.