: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண சட்டப்பேரவை, 2026-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியை “தீபாவளி தினமாக” அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தர்ஷனா படேல் மற்றும் ஆஷ் கல்ரா ஆகியோர் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தனர்.
இந்திய அமெரிக்கர்கள் மற்றும் தெற்காசியச் சமூகத்தினர் மீது ஆழ்ந்த மரியாதை செலுத்தும் இத்தீர்மானம், அன்றைய தினத்தில் கலிபோர்னியா மக்கள் அனைவரும் பங்கேற்று மகிழுமாறு அழைப்பு விடுக்கிறது. இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் மற்றும் ஜைனர்களால் கொண்டாடப்படும் ‘விளக்குகளின் வரிசை’ என்றழைக்கப்படும் தீபாவளி, இருள் மீது ஒளியும், தீமை மீது நன்மையும் வெல்லும் பண்டிகையாகச் சிறப்பிக்கப்படுகிறது.
இனிப்புகள், சுவையான உணவு மற்றும் ஒளிமயமான அலங்காரங்களின் மகிழ்ச்சியையும் தாண்டி, இத்தீர்மானம் தீபாவளியைத் தனிநபர் மற்றும் சமூக வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒரு நிகழ்வாகவே பாவிக்கிறது.
“கொண்டாடுபவர்களுக்குத் தீபாவளி என்பது அறிவு, வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சிக்காகத் தங்களை அர்ப்பணிக்கும் காலம். இது ஞானம், இரக்கம் மற்றும் நேர்மறை மாற்றத்தின் அவசியத்தைச் சிந்தித்துப் பார்க்கும் தருணம்” என்றும் அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது



