தன் வழிக்கு வராததால் ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடை விதிக்க அதிபர் டிரம்ப் முடிவு

 

அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தை பல்வேறு காரணங்களுக்காக தடைபட்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விநியோகத்தின் உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர மீண்டும் பொருளாதார தடை என்ற பழைய ஆயுதத்தை கையில் எடுக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

இது குறித்து அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘‘ஈரானால் சிக்கல்களை உருவாக்க முடியும். ஆனால் அவர்கள் பொருளாதார ரீதியாக நொடிந்து போயிருக்கிறார்கள். அவர்களிடம் பணம் இல்லை. வீரர்களுக்கு சம்பளம் தரக்கூட காசில்லை. பணவீக்கம் 300 சதவீதமாக உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் கூடுதல் பொருளாதார தடைகளை ஈரான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என்றார்.

ஆனால் இதற்கும் ஈரான் அஞ்சவில்லை. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி சமூக ஊடக பதிவில், ‘‘ தாங்களே உருவாக்கிய நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான எஞ்சிய வாய்ப்புகளை அமெரிக்கா அழித்துக் கொள்கிறது’’ என்றார். இதற்கிடையே போரால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ஈரான் தங்களுக்கு இழப்பீடு தர வேண்டுமென டிரம்பு கேட்டுள்ளார்.

ஈரானிடம் இருந்து அச்சுறுத்தல் வந்ததை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் துருக்கியில் கேட்டரிங் லாரியில் ஒளிந்துகொண்டு, பிறகு இங்கிலாந்துக்கு ரகசிய ராணுவ விமானத்தில் பயணம் செய்தது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் நேட்டோ உச்சி மாநாட்டிற்காக, கத்தார் நன்கொடையாக வழங்கிய, ஜெட் விமானத்தில் டிரம்ப், துருக்கியின் அங்காரா சென்றிருந்தார்.

துருக்கியின் அங்காராவில் இருந்து புறப்படுவதற்கு முன்பு, டிரம்ப் முதலில் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஊடகங்களின் முன்னிலையில் ஏறியுள்ளார். ஆனால், விமானம் அங்கிருந்து புறப்படவில்லை. அதற்கு பிறகு ஊடகங்கள் எல்லாம் கிளம்பிய பிறகு, கேட்டரிங் லாரி ஒன்றின் மூலம் டிரம்ப் வேறு விமானத்திற்கு ரகசியமாக அழைத்து செல்லப்பட்டார். பிறகு துருக்கியில் இருந்து இங்கிலாந்துக்கு சி-32ஏ என்ற ராணுவ விமானத்தில் ரகசியப் பயணம் மேற்கொண்டார். தற்போது இந்த தகவல் அம்பலமாகி உள்ளது.