சோலார் மின்சக்தி திட்டத்திற்கு ஒப்புதல் பெற இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,000 கோடி லஞ்சம் கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும், அதை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு நவம்பரில் குஜராத் தொழிலதிபர் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அதானி குழுமம் மறுத்து வந்தது. இதற்கிடையே, அமெரிக்காவில் அதானி குழுமம் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முன்வந்ததைத் தொடர்ந்து, கிரிமினல் வழக்கை கைவிடுவதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்தது. இதுதொடர்பாக நீதித்துறை மற்றும் அதானி சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த அமெரிக்க மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் கராபிஸ், அதானி மீதான குற்றவியல் வழக்கை நிரந்தரமாக தள்ளுபடி செய்வதாக நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கு வெளிநாட்டு விவகாரங்கள் சார்ந்தது என்றும், குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது கடினம் என்பதாலேயே வழக்கைக் கைவிட்டதாக நீதித் துறை தெரிவித்ததை ஏற்றுக் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார். இந்த தீர்ப்பை தொடர்ந்து கவுதம் அதானி தனது எக்ஸ் பதிவில், ‘‘உண்மை வென்றுள்ளது’’ என கூறி உள்ளார்.



