கால் சிகிச்சைக்கு சென்ற பெண்.. மாற்றி இதயத்தில் ஸ்டென்ட் பொருத்தியதால் உயிழந்த

ஹரியானாவில் கால் அறுவை சிகிச்சை சென்ற பெண்ணுக்கு மாற்றி இதயத்தில் ஸ்டென்ட் பொருத்தியதால் உயிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வட இந்திய மாநிலங்களான ஹரியானா, உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனையில் நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது தொடர்கையாக உள்ளது.அந்த வகையில், ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கால் எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட 42 வயது பெண் ஒருவர், இதயத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கால் அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண்
மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.உயிரிழந்தவர் ஹரியானா மாநிலம் பானிபட் ரமேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த குட்டி தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம் 21-ஆம் தேதி காசியாபாத்தில் ஏற்பட்ட விபத்தில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜூலை 24-ஆம் தேதி சிகிச்சைக்காக பானிபட்டில் உள்ள பார்க் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு கால் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், ஜூலை 25-ஆம் தேதி அவர்களிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல், எழுத்துப்பூர்வமான அனுமதியும் பெறாமல் மருத்துவர்கள் இதயத்தில் ஸ்டென்ட் பொருத்தியதாக கூறப்படுகிறது. மேலும், சிகிச்சைக்கான அனுமதி ஆவணத்தில் போலியான கையெழுத்து இடப்பட்டதாகவும், ஸ்டென்ட் பொருத்திய பின்னர் பெண்ணின் உடல்நிலை திடீரென மோசமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அனுமதி இல்லாமல் இதயத்தில் ஸ்டென்ட்?
இந்த சம்பவத்திற்குப் பிறகு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தங்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த புகாரின் அடிப்படையில் பானிபட் செக்டர்-29 காவல்துறையினர் பார்க் மருத்துவமனை மற்றும் அடையாளம் தெரியாத மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மருத்துவப் பதிவுகள், சிகிச்சை ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில், மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி சப்னா, குடும்பத்தினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். கால் அறுவை சிகிச்சைக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட மயக்க மருந்து பரிசோதனையின் போது, நோயாளியின் இதயத்தில் கடுமையான பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

பானிபட் மருத்துவமனையில் பரபரப்பு..
அதனைத் தொடர்ந்து ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், இதய ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.இந்த விவரம் குடும்பத்தினருக்கு முழுமையாக விளக்கப்பட்டு, அவர்களின் சம்மதம் பெற்ற பிறகே ஸ்டென்ட் பொருத்தப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருவதுடன், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.