அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா 5,000 டாலர்கள் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார்.
டல்லாஸ் நகரில் புதனன்று நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டில் அதிபர் ட்ரம்ப் பேசுகையில், “வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், உங்களுக்கும் வெற்றி நிச்சயம். ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5,000 டாலர் (ரூ.4.8 லட்சம்) கிடைக்கும். இது ட்ரம்ப் ஈவுத்தொகை என அழைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
ஆனால், இத்திட்டத்திற்குத் தேவைப்படும் சுமார் 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான பெருந்தொகை எங்கிருந்து திரட்டப்படும் என்ற விவரத்தை ட்ரம்ப் குறிப்பிடவில்லை. எனினும், நமது நாடு தற்போது அதிகளவில் வருவாய் ஈட்டி வருகிறது என்று மட்டும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில், ஆதரவாளர்களிடையே உரையாற்றிய ட்ரம்ப், “வரும் இடைத்தேர்தலில் வாக்களிக்கும் போது, வாக்குச் சீட்டில் எனது பெயர் இருப்பதாகவே கருதிக்கொண்டு குடியரசுக் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஈரான் மீதான போர் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக ட்ரம்பின் ஆதரவு விகிதம் 30% ஆகக் குறைந்துள்ளதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.



