ரஷ்யா–ஈரான் ரகசிய ஒத்துழைப்பு? ஜெலன்ஸ்கி கவனத்தை ஈர்த்த டிரம்

 

சர்வதேச அரசியலில் தற்போது மிகப்பெரிய ராஜதந்திரப் போர் உருவாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைத் துல்லியமாகத் தாக்குவதற்கு, ரஷ்யா தனது செயற்கைக்கோள் தரவுகளை ஈரானுக்கு வழங்கி உதவி வருவதாக அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஜூலை 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில், பக்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ரஷ்ய செயற்கைக்கோள்கள் படம் பிடித்ததாகவும், அந்தத் தகவல்கள் ஈரானிடம் சென்ற பிறகே அங்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் ஜெலன்ஸ்கி ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஏர்போர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜெலன்ஸ்கியின் குற்றச்சாட்டை எதிர்பாராத வகையில் கையாண்டுள்ளார்.

“ரஷ்யா அப்படி ஏதேனும் உதவி செய்கிறதா என்று நான் அதிபர் புதினிடம் நேரடியாகக் கேட்டு தெரிந்துகொள்கிறேன்,” என்று அவர் மிகவும் சாதாரணமாக பதிலளித்துள்ளார்.

மேலும், “ரஷ்யா ஒருவேளை ஈரானுக்கு உதவினாலும், அதனால் அமெரிக்காவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஈரானின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என அனைத்தையும் அமெரிக்கா ஏற்கனவே சிதைத்துவிட்டது. இப்போது அவர்களிடம் எதுவும் இல்லை,” என்று டிரம்ப் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் ராணுவத் தளவாடங்கள் பெரிய அளவில் பலன் தருவதில்லை என்பதற்கு வெனிசுலாவை உதாரணமாக டிரம்ப் சுட்டிக்காட்டினார். அங்கு ரஷ்யா வழங்கிய ஆயுதங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, ஈரானுக்கு ரஷ்யா செய்யும் உதவிகள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், உக்ரைன் உளவுத்துறை சேகரித்துள்ள ரஷ்யாவின் இந்த ரகசிய நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை தனது சர்வதேச கூட்டாளிகளுடன் பகிர்ந்துகொள்ளப் போவதாக ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது நட்பு நாடுகளை விட ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளாரோ என்ற கேள்வி இந்தச் சம்பவத்தின் மூலம் மீண்டும் எழுந்துள்ளது. ஜெலன்ஸ்கி முன்வைக்கும் ஆதாரங்களை டிரம்ப் ஏன் புறக்கணிக்கிறார்? ரஷ்யா உண்மையிலேயே ஈரானுக்கு பின்னால் இருந்து அமெரிக்காவுக்கு எதிராக காய் நகர்த்துகிறதா? என்ற விவாதங்கள் தற்போது உலக அரங்கில் தீவிரமடைந்துள்ளன.

வரும் நாட்களில் புதினுடன் டிரம்ப் நடத்தவுள்ள பேச்சுவார்த்தை, மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் போரின் போக்கை மாற்றியமைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.