ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடிக்க உக்ரைனுக்கு, கனடா உதவிக்கரம் நீட்ட உள்ளது. உக்ரைனின் வான் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நிதி உதவி திட்டத்திற்கு கனடா ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைனின் வான் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக 350 மில்லியன் கனேடிய டாலர் (சுமார் 253 மில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான ராணுவ உதவித் திட்டத்தை வழங்க கனடா அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்த பிறகு, வான்வழித் தடுப்பு ஏவுகணைகளை வாங்க 350 மில்லியன் கனேடிய டாலர் மதிப்பிலான உதவித் தொகுப்பை வழங்க கனடா ஒப்புக்கொண்டுள்ளதாக, அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி தகவல் தெரிவித்து உள்ளார். ரஷ்யாவின் தீவிர வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்குத் தேவையான அதிமுக்கியமான வான் பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணைகளை (Air defense interceptors) வாங்க இந்த நிதி பயன்படுத்தப்படும். மேலும் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஆயுதக் கொள்முதல் திட்டமான JUMPSTART வழிமுறை மூலம் இந்த ஏவுகணைகள் உக்ரைனுக்கு விரைவாக விநியோகிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைனின் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், ராணுவ ரீதியிலான இந்த நிதி உதவி தங்களுக்கு மிகவும் முக்கியமானது என அதிபர் ஜெலென்ஸ்கி, கனடாவிற்கு நன்றி தெரிவித்து கொண்டுள்ளார்.



