நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒரு அர்த்தம், பலன்கள் இருப்பதாகவும், இந்த கனவுகள் நம்முடைய நிகழ்காலம் அல்லது எதிர்காலத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சொப்பண சாஸ்திரம் சொல்கிறது. அதிலும் ஆன்மீகம் சார்ந்த கனவுகள், தெய்வங்கள் கனவில் வருவது என்பது அனைவருக்கும் நடப்பது கிடையாது. தெய்வத்தின் அருள் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு மட்டும் தான் இத போன்ற கனவுகள் வரும் என சொல்லப்படுகிறது. அப்படி ஆடி மாதத்தில் அம்மன் கனவில் எப்படி வடிவத்தில் வந்தால் என்ன பலன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம், அம்மனின் சக்தி அதிகரித்து காணப்படும் மாதமாகும். இந்த மாதத்தில் அனைத்து தெய்வங்களும் சக்திக்குள் அடக்கம் என சொல்லப்படுகிறது. அம்மனின் அருளை பெறுவதற்குரிய ஆடி மாதத்தில் அம்மன் கனவில் வருவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இது அனைவருக்கும் நடந்து விடாது. உங்களுடைய கனவில் அம்மன் எப்படி வந்தார் என்பதை பொறுத்து அதன் பலன்கள் மாறுபடும். ஆடி மாதத்தில் அம்மன் எந்த கோலத்தில் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். பொதுவாக ஆடி மாதத்தில் அம்மன் கனவு வருவது நல்ல நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
அம்மன் ஆசி வழங்குவதாக கனவு கண்டால்…
அம்மன் சிரித்த முகத்துடன் இருப்பது போலவோ அல்லது ஆசி வழங்குவது போலவோ அல்லது கோவிலில் வீற்றிருப்பது போலவோ கனவு வந்தால் அது தெய்வ அருள் எப்போதும் உங்களுடன் இருக்கிறது என்று அர்த்தம். உங்கள் மனதில் இருக்கும் கவலை, பயம், குறை, குழப்பம் ஆகியவை விரைவில் தீர போகிறது என்று அர்த்தம்.
அம்மன் கோவிலில் தீபம் எரிவது போல் கனவு கண்டால்…
அம்மன் கோவிலில் தீபம் எரிவது போல், அம்மன் கோவிலில் பூக்கள், குங்குமம் இருப்பது போல் கனவு கண்டால் வீட்டில் நல்ல மாற்றங்கள், மன அமைதி மற்றும் தெய்வ அருள் அதிகரிக்க போகிறது என்று அர்த்தம். வீட்டில் தெய்வ அருளால் மங்கள நிகழ்வுகள், மங்களகரமான மாற்றங்கள் நிகழ போகிறது என்று அர்த்தம். நீண்ட நாட்களாக இருந்த தடைகள் விலகி, நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
அம்மன் சிலை கனவில் வந்தால்…
அம்மன் சிலையை கனவில் கண்டால் நீங்கள் மனதில் நீண்ட நாட்களாக நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேற போகிறது என்று அர்த்தம். தெய்வீக அருள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்கும் என்றும் அர்த்தம்.
வேப்பிலை கனவில் கண்டால்…
ஆடி மாதத்தில் வேப்பிலை அல்லது வேப்ப மரத்தை கனவில் காண்பது மிகவும் மங்களகரமானதாகும். உங்கள் குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு கிடைக்கும் என்று அர்த்தம். மேலும் உங்கள் வாழ்க்கையில் செழிப்பான, மகிழ்ச்சியான பல மாற்றங்கள் நடக்க போவதன் அறிகுறியாக இது கருதப்படுகிறது.
அம்மன் கோவிலை கனவில் கண்டால்…
அம்மன் கோவிலை கனவிலை அல்லது அம்மன் கோவிலுக்குள் செல்வது போல் கனவு கண்டால் உங்கள் வாழ்க்கையில் இருந்த துன்பங்கள் விலகி, மகிழ்ச்சி உண்டாகும் என்று அர்த்தம்.
அம்மனுக்கு தீபாராதனை காட்டுவது போல் கனவு வந்தால்…
அம்மனுக்கு தீபாராதனை காட்டுவதை போலவோ அல்லது அலங்காரங்கள் நடப்பதாகவோ கனவில் கண்டால் உங்களுக்கு விரைவில் சுபச்செய்திகள் தேடி வரும் என்று அர்த்தம். திருமணம் ஆகாதவர்களுக்கு இது போல் கனவு வந்தால் விரைவில் அவர்களுக்கு திருமண யோகம் கூடி வரப் போகிறது என்று அர்த்தம்.



