பிலிப்பைன்ஸ் பயணிகள் கப்பலில் தீ –  87 பேர் மாயம்

 

பிலிப்பைன்ஸின் பலவான் மாகாணத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான கொரான் கடற்பரப்புக்கு அருகில் பயணிகள் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், 87 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

புதன்கிழமை (9) மாலை கொரான் நகரத்தின் கரையிலிருந்து சுமார் 1.2 கடல் மைல் தொலைவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த கப்பலில் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் என மொத்தம் 134 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 42 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எனினும், 87 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தீ விபத்தின் போது கப்பல் முழுவதும் தீப்பற்றி எரிந்த காட்சிகளை பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, குறித்த கப்பல் மணிலாவில் இருந்து கொரான் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் கடலோரக் காவல்படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதுடன், மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.