அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக அரசு தனக்கு தானே குழி தோண்டிக் கொள்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
இந்த திருத்தத்தால் நாடும் எதிர்க்கட்சிகளும் அழியும் அபாயம் உள்ளன என்றும் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதுகாப்புப்பணியாள் தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
மத்திய வங்கி பிணைமுறி மோசடி
“நான் வெலிக்கடைச் சிறையில் இருந்தபோது, மத்திய வங்கி பிணைமுறி மோசடி நபரை காணவில்லை. சிறை முழுவதும் தேடியும் அவர் இருக்கவில்லை
உகண்டாவில் பணத்தை வைத்திருந்ததாக கூறப்பட்டவரோ அல்லது வெள்ளைப்பூடு, சீனி மற்றும் கடவுச்சீட்டு மோசடிகளுடன் தொடர்புடையவர்களோ எவரையும் சிறையில் காணவில்லை. அனைவரும் வெளியில் தான் சுதந்திரமாகத் திரிந்துகொண்டிருக்கின்றார்கள்.
போரை வென்று, அதிக காலத்துக்கு ஆட்சியில் இருக்க முயன்றவர்கள் 2022ஆம் ஆண்டில் மக்களால் தோற்கடிக்கப்பட்டனர்.
மக்களுக்குப் பொருத்தமில்லாமல் ஆட்சியைத் தக்கவைக்க முயன்ற காரணத்தினாலேயே அவர்களுக்கு அந்த நிலை ஏற்பட்டது. அதேபோன்று, தற்போதைய அரசு தனது இருப்புக்காகவே 22ஆவது திருத்தத்தைக் கொண்டு வருகின்றது.இது அரசு தனக்குத் தானே தோண்டிக் கொள்ளும் குழியாகும்.
பொதுமன்னிப்பு நிறுத்தம்
தேசிய பண்டிகைக் காலங்களில் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பொதுமன்னிப்பு வழங்குவது இந்த அரசு வந்த பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டாலும், சில காரணங்களுக்காக அவர்கள் விடுதலை பெறும் சந்தர்ப்பங்கள் இல்லாமல் போவது அநீதியாகும்.
இதேவேளை, 70 வயதுக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இருக்கின்றனர். அவர்கள் நடக்கக்கூடிய முடியாதவர்களாக இருக்கின்றனர். அவர்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
18 வயதில் வந்த இளைஞர், புனர்வாழ்வு பெற்று வெளியில் விடப்படாமல் 54 வயதில் சிறையிலேயே உயிரிழந்த சம்பவத்தை நான் சிறையில் அவதானித்தேன். இவ்வாறான விடயங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்றார்.



