அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள துவக்கப்பள்ளி ஒன்றில் மர்ம நபர் நடத்திய வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில், 3 பிஞ்சுக் குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நபரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவில் கல்வி நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்நிலையில், ஒரேகான் மாகாணம் பெண்ட் நகரில் உள்ள ‘சில்வர் ரயில்’ துவக்கப்பள்ளியில் பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
மதியம் சுமார் 1 மணியளவில், பள்ளி வளாகத்திற்கு வெளியே நின்றிருந்த கார் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் பள்ளியை சுற்றி வளைத்தனர். அதற்குள் அந்த நபர் பள்ளியை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்த கொடூரத் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். மேலும் சிலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தாக்குதல் நடத்திய நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
பள்ளிக்கு படிக்கச் சென்ற பிஞ்சுக் குழந்தைகள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வலையையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



