நெதன்யாகுவுக்கு கடும் நெருக்கடி இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் அதிகளவு வாக்குகள் பதிவு

 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மொத்தமாக 120 ஆசனங்கள் உள்ளன. ஆட்சி அமைப்பதற்கு குறைந்தது 61 இடங்கள் தேவைப்படுகிறது.

இன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன்போது 73,36,553 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்தல் களத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி லிகுட் கட்சியும் முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான யாஷார் கட்சியும் கடுமையாக போட்டியிடுவதாக கருத்துக்கணிப்புகள் வாயிலாக தெரியவருகிறது.

இந்த தேர்தல் முடிவில் நெதன்யாகு தொடர்ந்து ஆட்சியில் நிலைத்திருப்பாரா அல்லது தோல்வியை சந்திப்பாரா என்பதே சர்வதேச அளவில் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக வெளியான சில கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், நெதன்யாகுவின் கட்சியை விட காடி ஐசென்கோட்டின் கட்சியே முன்னிலை வகிக்க வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காகவே சுமார் 67 ஆயிரம் இஸ்ரேலியர்கள், அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலிருந்து தமது தாய்நாட்டுக்கு திரும்பியிருப்பதாகவும் இவர்களில் பாதி பேர் அமெரிக்காவிலிருந்து சென்றிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

2023 ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து, காசாவில் இஸ்ரேல் இராணுவம் 3 ஆண்டுகளாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலில் ஒரு பிரிவினர் நெதன்யாகு அரசுக்கு எதிராக பல போராட்டங்களில் ஈடுபட்டனர்.

காசா போர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இஸ்ரேலில் நடைபெறும் முதல் தேர்தலாக இந்த பொதுத் தேர்தல் பார்க்கப்படுகிறது. அமைதியின்மையையும் போராட்டங்களையும் சந்தித்த இஸ்ரேலில் இன்று அந்நாட்டில் நடைபெறும் வாக்குப்பதிவுகள் பிரதமர் நெதன்யாகுவின் ஆட்சி நிலையை நிர்ணயிக்கப்போகிறது என பல தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.