இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட புலிகள் உறுப்பினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

 

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப முயன்ற குற்றச்சாட்டில் இந்தியப் பாதுகாப்புப் படையினரால் இவர் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவில் இடம்பெற்ற நீதிமன்ற விசாரணைகளின் பின்னர், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த சிறைத்தண்டனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவரை இலங்கைக்கு நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய, நேற்று (26) இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவரை, அங்கு தயாராக இருந்த பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்தனர்.

சந்தேகநபர் தொடர்பாக உளவுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, அவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.