கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தற்போது சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஷிரந்தி ராஜபக்ச உயிராபத்தான நிலையில் உள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிக்கு அவ்வப்போது ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகிய நோய்கள் தீவிரமடைந்ததன் காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்காக இன்று பிணை கோரப்பட்ட வாதங்களை முன்வைக்கும் போதே ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இதனைக் குறிப்பிட்டார்.
வீடு சென்ற மகிந்த
சந்தேகநபர் நாமல் ராஜபக்சவின் தந்தை மகிந்த ராஜபக்ச அவ்வப்போது ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வு நோய்கள் தீவிரமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். ஆனால் அவரைக் கவனித்துக்கொள்வது அவசியமாகும். அவரை இதுவரை காலம் கவனித்து வந்தது சந்தேகநபரின் தாயாரான ஷிரந்தி ராஜபக்சவே ஆவார். ஆனால் அவரும் தற்போது இதய நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது இதயத்திற்கு இரத்தத்தை அனுப்பும் பிரதான குழாய் அடைபட்டுள்ளது. இதனால் இதயத்திற்கு ஒட்சிசன் வழங்கும் பாதை தடைப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
அவருக்கு எஞ்சியோகிராம் பரிசோதனை மற்றும் மேலும் இரண்டு சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
அதில் ஒரு சத்திர சிகிச்சை தற்போது மேற்கொள்ளப்பட்டு, அவர் இதயத் துடிப்பு கட்டுப்பாட்டுக் கருவி உதவியுடன் தற்போது வைத்தியசாலையில் உள்ளார்.
மருத்துவப் பரிந்துரைகளுக்கமைய, அவருக்கு இரண்டாவது சத்திர சிகிச்சையாகத் திறந்த இதயச் சத்திர சிகிச்சை இன்று பிற்பகல் 4 மணிக்கு மேற்கொள்ளப்படுகின்றது.
ஆபத்தான நிலையில் ஷிரந்தி
அது உயிராபத்து நிறைந்த ஒரு சத்திர சிகிச்சையாகும். இன்று இச்சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர், சந்தேகநபரின் தாய் உயிரோடு இருப்பாரா இல்லையா என்பதைக் கூட உறுதியாகக் கூற முடியாது.
இப்போது சந்தேகநபரின் தந்தையான மகிந்த ராஜபக்சவை கவனித்துக்கொள்ள, அவரின் மனைவியான ஷிரந்தியினால் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தேக நபரான நாமலுக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
ஒரு சந்தேகநபரை விளக்கமறியலில் வைப்பது தண்டனையாகச் செயற்படுத்தப்படக் கூடாது. இன்று எனது கட்சிக்காரர் தனது தாயாரை பார்க்கத் தவறினால், ஒருவேளை எப்போதும் தாயை பார்க்க முடியாத நிலை ஏற்படலாம்.
தாய், தந்தையை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு நாமலுக்கு உண்டு. போரில் பிரபாகரன் உயிரிழந்த போதும், அவரது தாய், தந்தையை நாம் கவனித்துக்கொண்டோம்.
இரக்க உணர்வை இழந்துவிடக் கூடாது. எனவே மனிதாபிமான மற்றும் அனுதாப ரீதியாகக் கருத்திற்கொண்டு, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் பரிசீலித்துச் சந்தேகநபருக்குப் பிணை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கோரிக்கை விடுத்தார்.



