புயல் பாதுகாப்பு- தஞ்சமடைவதற்கு இந்தியக் கடற்பரப்பில் இலங்கைப் படகுகளுக்கு அனுமதி

 

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயலினால் ஏற்பட்டுள்ள அபாயகரமான காலநிலைச் சூழலில், இந்தியக் கடற்பரப்பில் பாதுகாப்பாகத் தஞ்சமடைவதற்குச் சுமார் 25 இலங்கை பலநாள் கடற்றொழில் படகுகளுக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடற்றொழில் அமைச்சு, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இந்திய அரசிடம் விடுத்த விசேட இராஜதந்திரக் கோரிக்கைக்கு அமையவே இந்த அவசர அனுமதி பெறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின்படி, ‘அர்னாப்’ புயல் நாளை(27.10.2026) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதியினூடாகக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொழில் நடவடிக்கை

இதனால், வட அகலாங்கு 10ஏ – 20ஏ மற்றும் கிழக்கு நெட்டாங்கு 80ஏ – 95ஏ இற்கு இடைப்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 80 முதல் 140 கிலோமீற்றர் வரை மிகக் கடுமையாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடல் அலைகள் 3 முதல் 4 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதால், அந்தக் கடற்பகுதிகளுக்குப் பயணிப்பதைத் தவிர்க்குமாறு கடற்றொழில் சமூகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் சுமார் 25 இலங்கை பலநாள் கடற்றொழில் படகுகள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உடனடி நடவடிக்கை
தீவிரமடைந்துள்ள புயல் காரணமாக, இந்தப் படகுகள் மீண்டும் இலங்கையை நோக்கிப் பாதுகாப்பாகப் பயணிப்பதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டன.

இதனைக் கருத்தில்கொண்டு, கடற்றொழிலாளர்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைச்சு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

இதன்படி, ஆபத்தான வானிலை மண்டலத்திலிருந்து தப்பித்துத் தற்காலிகமாகப் பாதுகாப்பைப் பெறுவதற்காக, அப்படகுகள் இந்தியக் கடற்பரப்புக்குள் நுழைய இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.