உலக அணு ஆயுதப் போர் விளிம்பில் உள்ளதா? ரஷ்யா-அமெரிக்க-நேட்டோ போர்

 

உலகம் அணு ஆயுதப் போரின் விளிம்பில் உள்ளதா? உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர், அணு ஆயுத வல்லரசுகளுக்கு இடையேயான ஒரு வெளிப்படையான மோதலாக தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களின் நிகழ்வுகளிலிருந்து இந்தக் கேள்வி நேரடியாக எழுகிறது.

போலந்துக்கும் லித்துவேனியாவுக்கும் இடையே பால்டிக் கடலோரத்தில் அமைந்துள்ள ரஷ்யப் பிரதேசமான காலினின்கிராட்டை நேட்டோ முற்றுகையிட முயன்றால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக ரஷ்யா இந்த வாரம் அறிவித்தது. இந்த எச்சரிக்கையானது, செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் பெல்ஜியம், பிரிட்டன், அயர்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள ரஷ்யத் தூதரகங்கள் மூலமாகவும் மற்றும் நேட்டோ அமைப்புக்கான தூதரக குறிப்பு மூலமாகவும் விடுக்கப்பட்டது.

 

காலினின்கிராட் (Kaliningrad) மீது “வான்வழி மற்றும் கடல்வழி முற்றுகையை” நேட்டோ தயாரித்து வருவதாகத் தெரிவித்த அயர்லாந்திலுள்ள ரஷ்யத் தூதரகம், “இதில் எந்தத் தவறும் நேரக்கூடாது — நேட்டோ நாடுகள் காலினின்கிராட் பகுதியை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்த முயன்றால், ரஷ்யா தனது நிலப்பரப்பைப் பாதுகாக்க அணு ஆயுதங்கள் உட்பட தனது அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தத் தயாராக இருக்கும்” என்று தெரிவித்தது.

கடந்த செவ்வாயன்று இதற்குப் பதிலளித்த நேட்டோ செய்தித் தொடர்பாளர் அலிசன் ஹார்ட், “நேட்டோ ஒரு தற்காப்புக் கூட்டணி, மேலும் எங்களின் எந்தவொரு நடவடிக்கைகளோ அல்லது பயிற்சிகளோ ரஷ்யாவின் எந்தப் பகுதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதில்லை” என்று கூறியதுடன், “பொறுப்பற்ற அணு ஆயுத வாய்வீச்சு உட்பட படைபலத்தைப் பயன்படுத்தும் அச்சுறுத்தலை” கண்டித்தார்.

இவரது இந்தக் கூற்று முற்றிலும் பொய்யானது. ஏனெனில், நேட்டோ கூட்டணியானது ரஷ்யாவிற்குள் உக்ரேனியத் தாக்குதல்களுக்கு ஆயுதம் வழங்கி வழிநடத்துகிறது.

அக்டோபர் 2025-ல், “ரஷ்யாவிற்குள் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களைத் தாக்க” கீயேவ்விற்கு உதவுவதற்காக ட்ரம்ப் நிர்வாகம் உளவுத் தகவல்களை வழங்கும் என்று NBC நியூஸ் செய்தி வெளியிட்டது.

ஜூலை 30 அன்று, ஐரோப்பிய ஆணையம் “நீண்ட தூரம் செல்லக்கூடிய ஜெட்-இயந்திர ட்ரோன்களுக்கான” நிதி உட்பட, கீயேவ்விற்கு 3.47 பில்லியன் யூரோக்களை வழங்கியது.

 

செப்டம்பர் 19 முதல் 20 வரையிலான இரவில், மாஸ்கோ மீதும் அதைச் சுற்றியுள்ள பகுதி மீதும் இந்தப் போரில் தனது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை உக்ரேன் நடத்தியது. ஆகஸ்ட் 28 அன்று, ரஷ்யாவின் அணு ஆயுதப் படைகளின் ஒரு பகுதியான Tu-95 மூலோபாய குண்டுவீச்சு விமானத்தை எங்கெல்ஸ் விமானத் தளத்தில் உக்ரேனியப் படைகள் தாக்கின.

மேலும், நேட்டோவின் “நடவடிக்கைகளும் பயிற்சிகளும்” காலினின்கிராட்டையே இலக்காகக் கொண்டிருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மத்தியில், ரோய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டிய ஒரு மேற்கத்திய இராணுவ வட்டாரத்தின்படி, அறிவிக்கப்படாத நடவடிக்கை ஒன்றில் டசின் கணக்கான நேட்டோ விமானங்கள் காலினின்கிராட் பிரதேசத்தைச் சுற்றிப் பறந்தன.

இந்த நடவடிக்கை, அதன் வானொலி மற்றும் ரேடார் இணைப்புகளையும், அதன் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் அவர்களால் துண்டிக்க முடியும் என்பதைக் காட்டியது. கடந்த ஜனவரி மாதம் முதல், கப்பலிலுள்ள கொடிகளை மாற்றும் அல்லது டிரான்ஸ்பாண்டர்களை அணைக்கும் ரஷ்யாவுடன் தொடர்புடைய எண்ணெய்க் கப்பல்களை 14 ஐரோப்பிய நாடுகள், கப்பலில் ஏறிச் சோதனையிடக்கூடிய “நாடற்ற கப்பல்களாக” கருதி வருகின்றன. மேலும், கடந்த மார்ச் மாதம் ஸ்வீடன் அவற்றில் ஒன்றைக் கைப்பற்றியது.

செப்டம்பர் 11 அன்று, போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி காலினின்கிராட் குறித்துக் கூறுகையில், “அங்கு கிட்டத்தட்ட எந்தப் படைகளும் இல்லை” என்று கூறினார். “நாம் என்ன செய்வோம் என்பதில் [புட்டினுக்கு] நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தும் வகையில், நேட்டோ எமது தரப்பில் மிகவும் தீவிரமாகச் செயல்பட வேண்டும்” என்று அவர் முன்மொழிந்தார். மேலும் அவர், “ரஷ்யாவுடனான எங்கள் மோதலை உக்ரேனுக்குள் மட்டுமே வரையறுக்கப்பட்டதாக நாங்கள் எண்ணிக் கொண்டிருக்கக் கூடாது” என்றும் அவர் சேர்த்துக் கூறினார்.

மாஸ்கோ வெற்று மிரட்டல் விடுக்கிறது என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே ஐரோப்பிய வல்லரசுகள் செயல்பட்டு வருகின்றன. பிரஸ்ஸல்சில் புதன்கிழமை நடைபெற்ற யூரோ நியூஸ் பாதுகாப்பு மற்றும் விண்வெளி உச்சி மாநாட்டில், நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, “நான் இதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஸ நேட்டோவுக்கு எதிராக [புட்டின்] ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்” என்று அறிவித்தார்.

இந்த தர்க்கம் இடைவிடாத போர் தீவிரமடைதலை அடிப்படையாகக் கொண்டது. ஐரோப்பிய வல்லரசுகள் தங்கள் கொள்கையை உக்ரேனின் வெற்றியுடன் பிணைத்துள்ளன. “புட்டின், போர் ரஷ்யாவிற்கே வருகிறது என்பதை உணர வேண்டும்,” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு ஆணையர் ஆன்ட்ரியஸ் குபிலியஸ் கடந்த புதன்கிழமை அறிவித்தார்.

இதற்கிடையில், உக்ரேனின் இராணுவ நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. ஜூலையில் ரஷ்யாவின் 195 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் வெறும் 29-ஐ மட்டுமே அது இடைமறித்தது.

தனது மின்கட்டமைப்பைப் பாதுகாக்கத் தேவையான வான் பாதுகாப்பு வசதிகள் இல்லாமலேயே அது குளிர்காலத்துக்குள் நுழைகிறது. இனிவரும் ஒவ்வொரு பின்னடைவும் மேலும் போர் தீவிரப்படுத்தலைக் கொண்டே எதிர்கொள்ளப்படும்: இது, தரைப்படைகளை இறக்குவது அல்லது காலினின்கிராட் உட்பட புதிய போர்முனைகளைத் திறப்பது போன்றவற்றிற்கே வழிவகுக்கும்.

மாஸ்கோவைப் பொறுத்தவரை ஆபத்துகள் மிக உச்சத்தில் உள்ளன. கருங்கடலுக்கு கிரிமியா எப்படிப்பட்டதோ, அதே போன்றது பால்டிக் கடலுக்கு காலினின்கிராட் பகுதியாகும். இது பால்டிக் கடற்படையின் தலைமையகமாகவும், ரஷ்யாவின் அணு ஆயுதங்களை ஏவக்கூடிய இஸ்காண்டர் (Iskander) ஏவுகணைகளின் தளமாகவும் விளங்குகிறது. பின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைந்ததிலிருந்து, காலினின்கிராட் நிலத்திலும் கடலிலும் நேட்டோ கூட்டமைப்பால் சூழப்பட்டுள்ளது.

ஒரு வகையில், இந்தத் தனித்த நிலப்பகுதி கிரிமியாவைவிட அதிக உணர்திறன் வாய்ந்தாக உள்ளது. 1945ஆம் ஆண்டின் பொட்ஸ்டாம் மாநாடு இதை சோவியத் ஒன்றியத்துக்கு மாற்றியதிலிருந்து, இதன் நிலை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. காலினின்கிராட் மீதான நடவடிக்கை என்பது, அது ரஷ்யாவுக்குரியது என்பதில் எந்த அரசாங்கமும் கருத்து வேறுபாடு கொள்ளாத ஒரு பிரதேசத்தின் மீதான தாக்குதலாக இருக்கும். ரஷ்யாவின் அணு ஆயுதக் கோட்பாடானது, அதன் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு “மிகப்பெரிய அச்சுறுத்தலை” உருவாக்கும் வழக்கமான ஆக்கிரமிப்புக்கு எதிராக அணு ஆயுதப் பதிலடியை அனுமதிக்கிறது.

முன்னாள் ரஷ்ய இராஜதந்திரியும் வியன்னாவைத் தளமாகக் கொண்ட அணு ஆயுத ஆய்வாளருமான நிகோலாய் சோக்கோவ், கடந்த புதன்கிழமை வெளியான ராய்ட்டர்ஸ் நேர்காணல் ஒன்றில், “பால்டிக் கடலை முற்றுகையிடுவது உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகளை அவர்கள் (ரஷ்யா) எதிர்பார்க்கிறார்கள்; ஐரோப்பியக் கணக்கீட்டின்படி இது முழுமையான போருக்குக் சற்று குறைவான நிலையாக இருந்தாலும், அவர்களைப் பொறுத்தவரை இது வெளிப்படையான போராகவே அமையும். இதில் இரு தரப்பிலும் தவறான கணிப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக நான் கருதுகிறேன்” என்று கூறினார்.

ரஷ்யா மீதான முற்றுகை என்பது “ஐரோப்பியக் கண்ணோட்டத்தில் போருக்கு முந்தைய நிலையாக” இருக்கலாம்; ஆனால், சர்வதேச சட்டத்தின்படி அது ஒரு போர் நடவடிக்கையாகும். 1974-ல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு என்பதற்கான வரையறையில், “ஒரு நாட்டின் துறைமுகங்கள் அல்லது கடற்கரைப் பகுதிகளை மற்றொரு நாட்டின் ஆயுதப் படைகள் முற்றுகையிடுவது” என்பதும் அடங்கும்.

இந்த ஆபத்துகளைக் கருத்தில் கொண்டால், பேச்சுவார்த்தைகளுக்கான அழைப்புகளோ தீர்வு பற்றிய பேச்சோ இல்லாதிருப்பது திகைப்பூட்டுகிறது. ஐரோப்பியத் தலைநகரங்களில் நடைபெறும் ஒரே விவாதம், இந்த மோதலை எவ்வளவு தூரத்திற்கு, எவ்வளவு விரைவாகத் தீவிரப்படுத்துவது என்பது பற்றியது மட்டுமே ஆகும்.

ஆழமடைந்து வரும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள ஏகாதிபத்திய சக்திகளின் பொறுப்பற்ற தன்மையே இதுவாகும். இது போர் எங்கு சென்று முடியும் என்பதைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல் அதை முன்னோக்கித் தள்ளுகிறது. மூலதனக் கும்பலுக்காகப் பேசும் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு உண்மையான முறையில் எவ்விதக் கோரிக்கையையும் விடுக்க இயலாத புட்டின் ஆட்சி, அணு ஆயுத மிரட்டல் மூலம் இதற்கு பதிலளிக்கிறது.

1962 ஆம் ஆண்டுடன் உள்ள வேறுபாடு மிகத் தெளிவாகத் தெரிகிறது. கியூபாவில் இருந்த சோவியத் ஏவுகணைகள் காரணமாக, அமெரிக்காவும் சோவியத் யூனியனும் போரின் விளிம்பிற்கு வந்தபோது, அந்த ஆபத்து வெளிப்படையாகவே ஒப்புக்கொள்ளப்பட்டது.

அக்டோபர் 22 அன்று ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி தேசியத் தொலைக்காட்சியில் இந்த நெருக்கடியை அறிவித்தார். அதைத் தொடர்ந்து வந்த வாரத்தில் உலகம் ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாகக் கவனித்தது. கென்னடியும் சோவியத் தலைவர் நிகிட்டா குருச்ஷேவும் கடிதங்களைப் பரிமாறிக்கொண்டனர், மேலும் இரு அரசாங்கங்களும், அதன் விளைவுகளுக்கு அஞ்சி, பின்வாங்குவதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் வரை மறைமுக வழிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தின. இன்று, ஒப்புக்கொள்வதும் இல்லை, பேச்சுவார்த்தை நடத்துவதும் இல்லை.

ஆபத்தின் அளவுக்கும் அதைப் பற்றிய பொதுமக்களின் விழிப்புணர்வுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. ஏதோ ஒன்று கடுமையாகத் தவறாகப் போவதை கோடிக்கணக்கான மக்கள் உணர்கிறார்கள்.

ஆனால் தங்கள் அரசாங்கங்கள் அணு ஆயுதப் போருடன் சூதாடும் என்று அவர்களால் நம்ப முடியவில்லை. ஊடகங்களில் இந்த ஆபத்து சிறிதளவாவது சுட்டிக்காட்டப்பட்டால் கூட, அது ரஷ்யர்களின் விவரிக்க முடியாத அச்சுறுத்தலாகவும், புட்டினின் “அணு ஆயுதப் பேச்சு” மற்றும் இராணுவ மற்றும் இராணுவமல்லாத பல்வேறு உத்திகளை ஒன்றிணைத்து எதிரி நாட்டைத் தாக்கப் பயன்படுத்தும் நவீன “கலப்புப் போராகவுமே” சித்தரிக்கப்படுகிறது. மாறாக, ரஸ்யாவுக்கு எதிராக நேட்டோ நாடுகள் செய்து வரும் செயல்களுக்கு இது ஒரு பதிலடி நடவடிக்கையாக ஒருபோதும் சித்தரிக்கப்படுவதில்லை.

கடந்த புதன்கிழமை மாலை நிலவரப்படி, நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் சி.என்.என் ஆகியவை மாஸ்கோவின் எச்சரிக்கையைப் பற்றி செய்தி வெளியிடவில்லை. ஊடகங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் இந்த மோதலை மேலும் தீவிரப்படுத்துவதையே வலியுறுத்துகின்றனர். “ரஷ்யா தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், உக்ரேன் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா அனுமதிக்கும் என்பதே ட்ரம்ப் தரப்பிலிருந்து வரக்கூடிய சிறந்த செய்தியாக இருக்கும்” என்று வாஷிங்டன் போஸ்ட் திங்களன்று எழுதியது.

ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவுக்கு எதிராகப் போதுமான அளவுக்குக் கடுமையாக நடந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

மூன்று தசாப்தங்களாக நேட்டோ ரஷ்யாவின் எல்லைகள் வரை விரிவுபடுத்தப்பட்டதால் தூண்டப்பட்ட உக்ரேன் போர், அனைத்துக் கண்டங்களிலும் நடைபெற்று வரும் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

போர் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், மக்களின் முதுகுக்குப் பின்னால் ஒரு புதிய மற்றும் பேரழிவுமிக்க கட்டம் தயாராகி வருகிறது. இதற்கான விலையைக் கொடுக்கவிருக்கும் தொழிலாள வர்க்கம் இது குறித்து எச்சரிக்கப்பட வேண்டும். ஆயுதக் குவிப்பிற்கு நிதியளிக்க வேலைவாய்ப்புகளையும் சமூக நலத் திட்டங்களையும் வெட்டிக் குறைக்கும் அதே அரசாங்கங்கள்தான், அணு ஆயுதப் போராக மாறக்கூடிய ஒரு போரை நோக்கி நாட்டை இட்டுச் செல்கின்றன.