காவலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொலிஸார் தவறிழைத்திருந்தால் அரசாங்கம் பாதுகாக்காது –

 

பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பொலிஸ் அதிகாரிகள் தவறிழைத்திருந்தால் அவர்களை அரசாங்கம் ஒருபோதும் பாதுகாக்காது என்றும் நகர அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் தடுப்புக் காவலில் இடம்பெற்ற இளைஞரின் மரணம் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை (27) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவலில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் எமக்குப் பாரிய அதிர்ச்சியும் கவலையும் உள்ளது.

பொலிஸார் பல்வேறு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை, பொலிஸ் திணைக்களத்தில் சிறப்பாகச் செயற்படும் அதிகாரிகள் இருப்பதைப் போலவே, பழைய முறைகளில் செயற்படும் சில அதிகாரிகளும் இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது.

எனினும், அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவானது. எமது மட்டத்திலோ அல்லது அதிகாரிகளின் மட்டத்திலோ தவறுகள் இடம்பெற்றால், சம்பந்தப்பட்டவர்களைப் பாதுகாக்க நாம் முயற்சிக்க மாட்டோம். இத்தகைய தவறுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையே தொடர்ந்து முன்னெடுப்போம்.

பொலிஸார் பல நல்ல பணிகளைச் செய்து வருகின்றனர். இருப்பினும், சில அதிகாரிகளால் குறைபாடுகளும் தவறுகளும் இடம்பெறுகின்றன. அவற்றை அடையாளம் கண்டு, தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதே எமது நோக்கமாகும்.

கடந்த காலங்களில் பல பொலிஸ் அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணிய சில அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நீதித்துறை செயற்பாடுகளில் பொலிஸாரும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றனர். இருப்பினும், இடம்பெறக்கூடாத சம்பவங்கள் சிலவும் நடைபெறுகின்றன. அரசாங்கம் என்ற வகையில், அவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கான பொறுப்பு எமக்கு உள்ளது.

குறித்த இளைஞருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் விசாரணைக் குழுக்கள் உண்மைகளைக் கண்டறியும். எவரையும் தாக்குவதையோ கொலை செய்வதையோ எமது அரசாங்கம் ஒருபோதும் அங்கீகரிக்காது. இத்தகைய நடவடிக்கைகளைத் தடுத்து, அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் உருவாக்குவதற்கே நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.