அடக்குமுறைச் சட்டங்களின் கீழ் யுத்த காலத்தில் சிங்கள மொழியில் ஒரு வார்த்தை கூட பேசத் தெரியாத தமிழ் இளைஞர்களிடம், அவர்களுக்குப் புரியாத மொழியில் வாக்குமூலங்கள் எழுதப்பட்டு, வலுக்கட்டாயமாகக் கையெழுத்துகள் பெறப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் போராட்ட முன்னணி சுட்டிக்காட்டியது.
மக்கள் போராட்ட முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அந்த இயக்கத்தின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் நுவான் போபகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் குறுகிய காலப்பகுதிக்குள் பல்வேறு சட்டமூலங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தொடர்ந்து, அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அது தொடர்பான மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலங்களின் நோக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் மக்கள் ஆழமாக ஆராயவேண்டும்.
நாட்டில் ஏற்கனவே கொலை, போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பதற்கும் குற்றவாளிகளைக் கைது செய்து தண்டிப்பதற்கும் பல சட்டங்கள் உள்ளன. தண்டனைச் சட்டக்கோவை உள்ளிட்ட சட்டங்களின் கீழ் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்குச் சட்டங்கள் இல்லாமையே நாட்டின் பிரதான பிரச்சினை என்று கூற முடியாது.
பொலிஸாரின் விசாரணைக் குறைபாடுகள், ஊழல், குற்றவாளிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான தொடர்புகள், நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளே விசாரணைகளைப் பாதிக்கின்றன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் என்ற வரையறையின் கீழ் சாதாரண குற்றங்களையும் உள்ளடக்குவதற்கு இந்தச் சட்டமூலம் வழிவகுக்கக்கூடும். நான்கு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்கள் தொடர்பாகப் பொலிஸாருக்கு விரிவான அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. இதனால், சாதாரண குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என வகைப்படுத்தப்படும் அபாயம் உள்ளது.
இந்தச் சட்டமூலத்தின் கீழ் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு முன்னர் 72 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் வைத்திருக்க முடியும். அதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தடுப்புக் காவல் உத்தரவின் மூலம் இரண்டு மாதங்கள் முதல் அதிகபட்சமாக ஒரு வருடம் வரை தடுத்து வைப்பதற்கான ஏற்பாடுகளும் உள்ளன. இத்தகைய அதிகாரங்கள் பொலிஸாரின் துஷ்பிரயோகங்களுக்கும் சந்தேக நபர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாகும் அபாயத்துக்கும் வழிவகுக்கக்கூடும்.
யுத்தகாலத்தில் சிங்கள மொழியில் ஒரு வார்த்தை கூட பேச முடியாத தமிழ் இளைஞர்களை அழைத்து வந்து, அவர்களுக்குப் புரியாத சிங்கள மொழியில் வாக்குமூலங்களை எழுத வைத்து, வலுக்கட்டாயமாகக் கையெழுத்துகளைப் பெற்று, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மொழியைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் கூட சட்ட நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.கலாச்சாரம் காண்
அதேபோன்று, பட்டலந்த சித்திரவதை முகாம்களில் இளைஞர்கள் தாக்கப்பட்டு, அவர்களது பற்கள் உடைக்கப்பட்டு, வாக்குமூலங்களில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வலுக்கட்டாயமாகப் பெறப்படும் வாக்குமூலங்கள் நீதிமன்ற நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டால், அப்பாவிகள் தண்டிக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, பொலிஸாரிடம் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களைச் சாட்சியமாக ஏற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னரும், சிம் அட்டைகளை விற்பனை செய்ததற்காகச் சிலர் கைது செய்யப்பட்டனர். சஹ்ரானின் குழுவைச் சேர்ந்த ஒருவர் சிம் அட்டை வாங்கியதால், அதனை விற்பனை செய்த இளைஞர் ஒருவர் சுமார் ஒரு வருடம் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் அடிப்படை உரிமை வழக்கின் பின்னரே விடுவிக்கப்பட்டார்.
குற்றங்களைத் தடுப்பதற்குச் சட்டங்களை அதிகரிப்பது மட்டுமே தீர்வாகாது. பொருளாதார நெருக்கடி, வறுமை, வருமான ஏற்றத்தாழ்வு மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் போன்ற காரணிகளும் குற்றச்செயல்கள் அதிகரிப்பதில் தாக்கம் செலுத்துகின்றன. இவற்றுக்குத் தீர்வுகளை முன்வைக்காமல் கைது மற்றும் தடுப்புக் காவல் அதிகாரங்களை அதிகரிப்பதன் மூலம் குற்றங்களை முற்றாகக் கட்டுப்படுத்த முடியாது.
அரசாங்கம் முன்னர் எதிர்க்கட்சியில் இருந்தபோது அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததுடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதாகவும் உறுதியளித்திருந்தது. ஆனால் தற்போது புதிய அடக்குமுறைச் சட்டங்களை அறிமுகப்படுத்துவது முரண்பாடான அணுகுமுறையாகும். பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால், அங்கு மட்டும் இச்சட்டமூலத்தைத் தோற்கடிப்பது கடினமாக இருக்கலாம். எனவே, ஜனநாயகத்தையும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதற்காக மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றார்.



