ஊடக சுதந்திரத்தைப் பாதிக்கும் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் – ஜீ.எல். பீரிஸ்

 

அரசாங்கம் மிக விரைவில் சட்டமாக்க உத்தேசித்துள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் புதிய சட்டம், நாட்டின் ஜனநாயக உரிமைகளையும் ஊடக சுதந்திரத்தையும் முற்றாகக் கேள்விக்குள்ளாக்கும் ஆபத்தான சட்டமாகும். அதேநேரம் இது நாட்டை ஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி செலுத்துவதற்கான அரசாங்கத்தின் ஆரம்பகட்ட திட்டமாகும் என பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

மக்களுக்கான கூட்டு எதிர்க்கட்சி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் விரைவில் சட்டமாக்க எதிர்பார்த்துள்ளது. இது சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் ஒரு சட்டமாகும். குறிப்பாக ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு இதன் விளைவுகள் ஆபத்தானதாக அமையலாம். ஏனெனில், இச்சட்டத்திற்குப் பின்னர் இலங்கையில் ஊடக சுதந்திரத்தை அனுபவிக்க முடியாமல் போய்விடும்.

இந்த சட்டமூலத்தில் பல அடிப்படைக் குறைபாடுகள் காணப்படுகின்றன. பிரதானமாக பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம் இதில் தெளிவாக குறிப்பிடப்படாமல் இருக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராகச் சட்டங்கள் அவசியம்தான். அதனை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், பயங்கரவாதச் செயல் என்றால் என்ன என்பதை வரையறுப்பதில் இச்சட்டம் நம் அனைவரையும் பாரிய ஆபத்திற்குள்ளாக்கியுள்ளது. இச்சட்டத்தின்படி, அரசாங்கத்தை எதையேனும் செய்யும்படி கட்டாயப்படுத்துவது, அல்லது அரசாங்கம் எதையேனும் செய்வதிலிருந்து விலகியிருக்குமாறு கட்டாயப்படுத்துவதற்காக ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுவது ஆகியவை பயங்கரவாதச் செயல்களாக இச்சட்டத்தின் கீழ் வரையறுக்கப்படலாம்.

ஊடகவியலாளர்களின் கோணத்தில் இருந்து பார்க்கும்போது, இதில் உள்ள பிரதான ஆபத்து யாதெனில், ஏதேனும் ஒரு விடயம் தொடர்பில் அறிக்கையிடுவதும் ஏதேனும் ஒரு விடயத்திற்கு அனுசரணை வழங்குவதற்கும் இடையிலான வேறுபாட்டை இச்சட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஊடகவியலாளர்களின் பணி என்பது செய்திகளைப் வெளியிடுவது மட்டுமே. அது ஊடகவியலாளர்கள் எப்போதுமே செய்யும் செயலாகும். எனினும், செய்திகளை அறிக்கையிடுவது என்பது அனுசரணை வழங்குவதல்ல. எனினும், அவற்றுக்கிடையிலான இந்த வேறுப்பாட்டை இங்கு இல்லாமலாக்குகிறார்கள். ஏதேனும் ஒரு விடயத்தை அறிக்கையிடுவதன் ஊடாக மறைமுகமாக அதற்கு அனுசரணை வழங்கப்பட்டதாக இச்சட்டத்தின் கீழ் கருதும் சாத்தியம் உள்ளது.

அதுமட்டுமன்றி, இச்சட்டத்தின் ஊடாக பாதுகாப்புச் செயலாளருக்கு எந்தவொரு இடத்தையும் தடைசெய்யப்பட்ட இடமாகப் பிரகடனப்படுத்த முடியும். பாதுகாப்புச் செயலாளர் என்பவர் நிறைவேற்றுத்துறையின் பலம்பொருந்திய அதிகாரியாவார். அதன் பின்னர் எந்தவொரு ஊடகவியலாளராலும், நம்மில் எவராலும், சமூகத்தில் எவராலும் அந்த இடத்திற்குள் நுழைய முடியாது, படமெடுக்க முடியாது, எந்தக் குறிப்பையும் தயாரிக்க முடியாது, எதையுமே செய்ய முடியாது. அப்படியானால், இது தொடர்ந்தும் ஜனநாயக நாடா? அல்லது பொலிஸ் ராஜ்யமா? ஒரு சர்வாதிகார நாடா?.

துறைசார் நிபுணர்களின் பரிந்துரைகள் எதையும் கருத்திற்கொள்ளாமல், அரசியல் காரணங்களுக்காக மட்டுமே அமைச்சரவையால் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச்செல்லும் அரசாங்கத்தின் ஆரம்பகட்ட திட்டமாகும் என்றார்.