நள்ளிரவு 17 கைதிகள் தப்பி ஓட்டம் தேனி சிறை வார்டன்களை தாக்கி

 

தேனி மாவட்ட சிறையில் இருந்து நள்ளிரவு வார்டன்களை தாக்கிவிட்டு விசாரணை கைதிகள் 17 பேர் தப்பிச் சென்றனர். இவர்களில் 13 பேர் சிக்கியுள்ள நிலையில், மேலும் 4 பேரை தனிப்படையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 9 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு நடந்துள்ளதாக கூறி, தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு சான்றாக, 1995ல் வேலூர் சிறையில் இருந்து 48 பேர் தப்பிய சம்பவத்திற்கு பிறகு நேற்று முன்தினம் தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் இருந்து வார்டன்களை தாக்கிவிட்டு, 17 கைதிகள் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கண்டமனூர் அருகே தேக்கம்பட்டி மலைப்பகுதியில் மாவட்ட சிறை அமைந்துள்ளது. இந்த சிறையில் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள 4 பிளாக்குகளில், 200 கைதிகள் வரைதான் அடைக்கும் வசதியுள்ளது. ஆனால், இச்சிறையில், 334 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில், 3 பேர் குண்டர் சட்டத்தில் கைதானவர்கள். ஒரு பிளாக்கில் 50 கைதிகளை அடைக்க வேண்டிய நிலையில், 3ம் பிளாக்கில் மட்டும் 92 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

4வது பிளாக் 8வது அறையில் 17 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு 6 சிறைக்காவலர்கள் பணியில் இருந்துள்ளனர். இரவு 10.30 மணியளவில் கைதி முத்து இளங்கோவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறி சக கைதிகள், கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து, சிறைக்காவலர் ஸ்டாலின் பிரபு மற்றும் முதன்மைத் தலைமை வார்டன் மதன் மோகன் ஆகியோர், அந்த பிளாக்கிற்கு சிறை கதவை திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது கைதிகள் சிலர் போர்வை மூலம் வார்டன்களின் முகத்தை மூடி சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் இருவரையும் சிறைக்குள் தள்ளி கதவை பூட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்த 17 கைதிகள் பிரதான நுழைவாயிலை நோக்கி ஓடினர்.

அங்கு பணியில் இருந்த சிறைக்காவலர் தங்கப்பாண்டி அவர்களை தடுத்துள்ளார். அப்போது சமையலறையில் இருந்து எடுத்து வந்த கரண்டியால் கைதி பொன்முத்துச்செல்வம், தங்கப்பாண்டியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். பின்னர் பிரதான கேட்டை திறந்து, 17 பேரும் தப்பி ஓடினர்.

இதுகுறித்த தகவல் உடனடியாக சிறைத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேனி எஸ்பி பிரவின் கவுதம் அங்கு வந்து விசாரித்தார். தொடர்ந்து, தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி, தென் மண்டல சிறைத்துறை துணைத் தலைவர் முருகேசன் ஆகியோர் சிறைக்கு வந்து விசாரித்தனர். மேலும், 17 தனிப்படைகள் அமைத்து தப்பியோடிய கைதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். தமிழகம் முழுவதும் வாகன சோதனை, பஸ் நிலையம், ரயில் நிலையம் என பல இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. தேனி அருகில் கேரள எல்லையில் உள்ளதால், அங்கு அலர்ட் செய்யப்பட்டது.

இந்நிலையில், சிறையை சுற்றிய பகுதியில் பதுங்கி இருந்த கைதிகளான பிரவீன்குமார், சிலம்பரசன், ராஜ்குமார் மற்றும் ராஜா சிக்கந்தர் ஆகியோரை மடக்கிப்பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர். தப்பியோடிய மற்றவர்கள் மலைப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்பதால் மலைப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். சிறையில் இருந்து சுமார் 4 கிமீ சுற்றளவிற்கு அதி நவீன டிரோன் கேமராக்கள் மூலம் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இதோடு தேனி மாவட்டத்திலுள்ள

தேக்கம்பட்டி சிறையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில், சராசரியாக சுமார் 30 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பது சிறைத்துறை விதி. ஆனால் நேற்று முன்தினம் இரவு, 6 பேர் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். போதிய பாதுகாப்பு இல்லாததால்தான் கைதிகள் சுலபமாக சிறையில் இருந்து தப்பியுள்ளனர். உரிய எண்ணிக்கையில் போலீசார் இருந்திருந்தால் தப்பிச் செல்வதை தடுத்திருக்கலாம்.

சிறைக்கைதிகள் தப்பியபோது, முதன்மை தலைமை வார்டன் மதன் மோகன் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியையும் கைதிகளில் ஒருவர் பறித்துச் சென்றுள்ளார். கைதிகள் தாக்கியதில் காயமடைந்த சிறைக்காவலர்கள் தங்கப்பாண்டி, பால்பாண்டி ஆகியோர், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் சிறைக்காவலர்கள் ஸ்டாலின் பிரபு, ரமேஷ் பிரபு ஆகியோரும் சிகிச்சை பெறுகின்றனர்.