”எனக்குத் தெரிந்த< ஒருவர் இருக்கார். அவரை அறிமுகப்படுத்துறேன். அவர் சொல்றதைக் கேட்டு அட்ஜஸ்ட் செஞ்சுக்கிட்டா, உன்னோட படிப்புச் செலவை அவர் பார்த்துக்குவார்.
பணக் கஷ்டமே இருக்காது. இஷ்டம்போல ஜாலியாக வாழலாம்…” – 12-ம் வகுப்பு மாணவியிடம் பள்ளி ஆசிரியையே இப்படிப் பேசி பாலியல் சுரண்டலுக்குத் தள்ளியதாக எழுந்திருக்கும் புகார், தஞ்சாவூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள ஈஸ்வரி நகரைச் சேர்ந்தவர் 38 வயதான திவ்யா. மாதாக்கோட்டை அருகேயுள்ள தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றிவந்தார்.
பள்ளி முடிந்த பிறகு வீட்டில் மாணவிகளுக்கு டியூஷன் எடுத்துவந்திருக்கிறார். அவரிடம் அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் டியூஷன் படித்துவந்திருக்கிறார்.
தஞ்சாவூர் சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் 61 வயதான சண்முகசுந்தர்ராஜ். மேலவீதி அருகேயுள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் உடற்கல்வி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.
ஓய்வுக்குப் பிறகும் பணி நீட்டிப்பில் இருந்திருக்கிறார். திவ்யாவுக்கும் சண்முகசுந்தர்ராஜுக்கும் நெருக்கமான பழக்கம் இருந்திருக்கிறது. திவ்யாவின் துணையுடன் அந்த மாணவிக்கு சண்முகசுந்தர்ராஜ் பாலியல் தொல்லை கொடுத்துவந்திருக்கிறார்.
ஒருகட்டத்தில் மாணவி இதை வெளிச்சத்துக்குக் கொண்டுவர, தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ வழக்கில் இருவரையும் கைதுசெய்தனர்.
<இந்த விவகாரத்தில் இன்னும் பலருக்குத் தொடர்பிருக்க வாய்ப்புள்ளது. அவர்களையும் கைதுசெய்ய வேண்டும்” என்று ஆகஸ்ட் 19-ம் தேதி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும், மாணவர் அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், விவகாரம் மேலும் பரபரப்பானது.
இதன் உள் விவரங்களை அறிந்தவர்களிடம் பேசினோம். “பாதிக்கப்பட்ட 12-ம் வகுப்பு மாணவியின் பெற்றோர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர்.
மாணவி, அம்மாவுடன் வசிக்கிறார். அவரின் பொருளாதார நிலையை அறிந்த திவ்யா, ‘எனக்குத் தெரிஞ்ச ஒருவர் இருக்கார். அவர் சொல்றதைக் கேட்டு அட்ஜஸ்ட் செஞ்சுக்கிட்டா, பணக் கஷ்டமே இருக்காது’ என்று ஆசைவார்த்தை கூறியிருக்கிறார்.
யாரும் இல்லாத நேரத்தில் சண்முகசுந்தர்ராஜை வீட்டுக்கு வரவழைத்து, மாணவியிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். ‘சார்கூட கார்ல போயிட்டு வா’ என்று மாணவியை வற்புறுத்தி அனுப்பிவைத்திருக்கிறார்.
காரில் சென்றபோது சண்முகசுந்தர்ராஜ் மாணவியிடம் பாலியல்ரீதியாகத் தவறாக நடந்துகொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில் அவரிடமிருந்து மாணவி எப்படியோ தப்பித்து வந்துவிட்டார்.
இதை வீட்டில் சொன்னால் படிப்பை நிறுத்திவிடுவார்கள் என்ற பயத்தில் மாணவி மனதுக்குள்ளேயே வைத்துக் கலங்கியிருக்கிறார். அதன் பிறகு, விடுமுறை நாள்களில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ‘நோட்ஸ் தரேன், வா’ என திவ்யா மாணவியை அழைத்திருக்கிறார்.
அப்போது அங்கிருந்த சண்முகசுந்தர்ராஜ், மாணவியிடம் மீண்டும் தவறாக நடக்க முயன்றிருக்கிறார். ‘இதெல்லாம் ஊர், உலகத்துல நடக்குறதுதான்… அட்ஜஸ்ட் பண்ணிக்கோ’ என்று திவ்யா கூறியிருக்கிறார்.
சில சமயங்களில் சண்முகசுந்தர்ராஜுக்கு வீடியோ கால் செய்து, அந்த போனை மாணவியிடம் கொடுத்து பேசச் சொல்லியிருக்கிறார். அவரும் மாணவியிடம் ஆபாசமாகப் பேசியிருக்கிறார்.
கிட்டத்தட்ட பத்து மாதங்களாக மாணவி பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்.
ஒருநாள் சண்முகசுந்தர்ராஜ், திவ்யா வேலை பார்க்கும் பள்ளிக்கு வந்து அவரிடம் பேசிக்கொண்டிருந்ததை மாணவி பார்த்திருக்கிறார். அதன் பிறகுதான் தன் தோழியிடம் நடந்தவற்றைச் சொல்லி அழுதிருக்கிறார்.
தோழி தைரியம் கொடுத்ததைத் தொடர்ந்து, பள்ளியின் பிரின்ஸ்பால் மதியரசியிடம் மாணவி நடந்தவற்றைக் கூறியிருக்கிறார். இதையடுத்து பிரின்ஸ்பால் தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.
அதன் பிறகு, புகாரை வாபஸ் பெறச் சொல்லி பல்வேறு எண்களிலிருந்து மாணவி தரப்புக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. போலீஸாரும் முதலில் இதை முறையாக விசாரிக்கவில்லை.
விவகாரம் வெளியே கசிந்த பிறகே போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதனால், மாணவி தரப்பினர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்” என்றனர்
.மாதர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி யிடம் பேசினோம். “இந்த ஒரு மாணவிக்கு மட்டுமல்லாமல், மேலும் பல மாணவிகளிடம் இது போன்று நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
ஆசைவார்த்தைகளைக் கூறி மாணவிகளைப் பாலியலுக்குத் தள்ளிய அருப்புக்கோட்டை நிர்மலாதேவி விவகாரத்தைப்போலவே இதிலும் நடந்திருக்கலாம்.
விவகாரம் பெரிதானால் சிக்கல் ஏற்படும் என்பதால், போலீஸாரும் இருவர் கைதுடன் வழக்கை கமுக்கமாக முடிக்கப் பார்க்கிறார்கள். இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பிருக்கிறதா என்பதையும் விசாரித்து, அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தஞ்சாவூர் எஸ்.பி சுந்தரவதனத்திடம் பேசினோம். “போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் திவ்யா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உடல்நிலை சரியில்லை எனக் கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சண்முகசுந்தர்ராஜை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
திவ்யா இதுபோல் வேறு மாணவிகளிடமும் நடந்துகொண்டாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. வழக்கில் முறையாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருப்பது தெரியவந்தால், அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்
.
<ஆசிரியர்கள் என்ற பெயரில் இப்படியும் சில காம மிருகங்கள்!<+ ,



