ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின்பெயரில் போலி மொபைல் செயலி மூலம் பெரிய அளவிலான நிதி மோசடி

 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி போன்று வடிவமைக்கப்பட்ட போலி மொபைல் செயலி மூலம் பெரிய அளவிலான நிதி மோசடி நடந்துள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

கொழும்பு தலைமை நீதவான் அசாங்க எஸ். போடரகமவிடம் சி.ஐ.டி அதிகாரிகள் இந்தத் தகவலைத் தெரிவித்தனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயர், பிராண்ட் மற்றும் மயில் லோகோவைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் இந்தப் போலி செயலியை உருவாக்கியுள்ளனர்.

விமான டிக்கெட் கொள்வனவு செய்போருக்கு 50% சலுகை அல்லது பணம் திரும்பப் பெறலாம் என ஆசை காட்டி பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர்.

இந்தச் செயலியில் பதிவு செய்ய ஆரம்பக் கட்டணமாக பயனர்களிடம் 250 ரூபா வசூலிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்தவர்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கு ரகசியங்கள் திருடப்பட்டு, அவர்களின் அனுமதியின்றி வங்கிக் கணக்குகளில் உள்ள லட்சக்கணக்கான ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

தங்கள் வங்கி விவரங்கள் திருடப்பட்டதை ஆரம்பத்தில் அறியாத பாதிக்கப்பட்டவர்கள், தங்களது செல்பேசிகள் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் சூடாவதையும், மின்கலத்தின் ஆயுள் விரைவாகக் குறைவதையும் மட்டுமே கவனித்துள்ளனர்.

இந்த மோசடிப் பரிவர்த்தனைகளுக்கு உடந்தையாக இருந்து, தங்களது வங்கி கணக்குகளைப் பயன்படுத்த அனுமதித்த சிலரை பொலிஸார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

இந்தப் போலி செயலியை இயக்கிய முக்கிய குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதற்கான தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாக சி.ஐ.டி தெரிவித்துள்ளது.