–
பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்கள் மற்றும் மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களுக்கு இந்த சபையில் இருப்பதற்கு எவ்வித உரிமையும் கிடையாது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சானக மாதுகொட தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (28) சனிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மாவீரர் தினம் என்று பிரபாகரனை நினைவுகூர்ந்து வாரக் கணக்கில் வடக்கில் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. எவருக்கும் தமது உறவினர், நண்பரை நினைவுகூரலாம். ஆனால் துரைராசா எம்.பியினால் பிரபாரகரனுக்கு இனிய பிறந்த நாள்வாழ்த்து என்று இந்த சபையில் கூறியுள்ளார்.
அத்துடன் பால்ராஜ் என்பவருக்கு இந்த சபையில் வீரத்துவத்தை கூறினார். இவ்வாறாக கூறிய எம்.பிக்கு இந்த சபையில் இருப்பதற்கு உரிமை உள்ளதா? என்று கேட்கின்றேன்.
மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த காரணத்தினாலேயே இவர்களால் இப்போது இப்படி கூற முடிகின்றது. மஹிந்த ராஜபக்ஷ்வே விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளிகளின் கழுத்தில் இருந்த சைனட் குப்பிகளை அகற்றி அவர்களின் கைகளில் பாடப்புத்தகத்தையும் பென்சிலையும் கொடுத்தார். அவரே நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழும் சூழலை உருவாக்கினார். எமது நாட்டை அழிவு நிலைக்கு கொண்டு சென்ற விடுதலைப் புலிகளை நினைவுகூருகின்றனர். யாழ். கோப்பாய், வல்வெட்டித்துறை, சாவக்கச்சேரி போன்ற இடங்களில் நடந்த நினைவுகூரல் நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் கலந்துகொண்டுள்ளனர். சாவக்கச்சேரியில் நடந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் மாத்தறை பத் கடைக்கு நடந்த சம்பவத்தை பார்த்தோம். மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த கடையை அகற்ற நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வீதி எல்லையில் இருக்கும் கடைகள் தொடர்பில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அந்த கடை அகற்றப்பட்டுள்ளது. ஆனால் மாத்தறை பத் கடை மட்டுமா அவ்வாறு இருந்தது. சிங்கள கடை என்பதனால் மட்டும் தீர்மானங்களை எடுக்கக்கூடாது. அனைவர் தொடர்பிலும் ஒரே தீர்மானத்தையே எடுக்க வேண்டும்.
அத்துடன் யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் முடிவடைந்துள்ள போதும் இன்றும் வடக்கில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. 7000 சிங்கள மக்களும் 90,000 முஸ்லிம்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களை மீளக் குடியேற்ற எவராவது கதைத்தார்களா? சிங்கள மாணவர்களுக்கான கல்வி அங்கு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு நீதி கிடைத்துள்ளதா என்று கேட்கின்றேன் என்றார்.
இதன்போது சபையில் இருந்த துரைராசா ரவிகரன் எம்.பி. ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி கூறுகையில்,
இவ்வாறு கூறுவதற்கு இவருக்கு தகுதியில்லை. மக்கள் எங்களுக்கு வாக்களித்து இங்கு அனுப்புகின்றனர். மக்கள் கொண்டாடுவதையே நாங்கள் கொண்டாடுகின்றோம். இங்கே இதுபற்றி பேச இவருக்குதான் தகுதியில்லை. இப்படியென்றால் எவ்வாறு இனப்பிரச்சினையை தீர்ப்பீர்கள் என்றார்.



