தமிழகத்தில் உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணி அளவில் தொடங்கியது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் பதவியேற்றது. இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் தங்களது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஆளுங்கட்சியான விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
இதனால் இந்த இரண்டு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, அந்த இரண்டு தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் அறிவிப்பை கடந்த செப்டம்பர் மாதம் ஏழாம் திகதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் ஒன்பதாம் திகதி தொடங்கி 16ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
இந்த இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் – எதிர்க்கட்சியான திமுக- அதிமுக – நாம் தமிழர் கட்சி- இடதுசாரிகள் என ஐந்து முனை போட்டி உருவானது.மொழிபெயர்ப்பு காண்க
இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி சுகந்தி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட மொத்தம் 27 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.
தாராபுரம் ( தனி) சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பி. சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் கே. பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ப. லட்சுமணன் உள்ளிட்ட 22 பேர் போட்டியிடுகிறார்கள்.
இந்த இரண்டு தொகுதிக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. தொடர்ந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 9 மணி அளவில் மதுராந்தகத்தில் 16 சதவீதமும் தாராபுரத்தில் 17.5 சதவீத வாக்குகளும் பதிவானது. பதினோரு மணி அளவில் மதுராந்தகத்தில் 35.5 சதவீத வாக்குகளும், தாராபுரத்தில் 37.2 சதவீத வாக்குகளும் பதிவானது.
தொடர்ந்து மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். இந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை எதிர்வரும் ஒன்பதாம் திகதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு மாத காலத்தில் முதல்வர் விஜயின் மக்கள் செல்வாக்கு ஏறுமுகத்தில் தொடர்கிறதா? அல்லது ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? என்பதை இந்த இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனிடையே தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தலுடன் மேற்கு வங்காள மாநிலத்தில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தலும், அசாம் மாநிலத்தில் ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



