ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பௌத்த பிக்குகள் பலர் முகாமிட்டுள்ளனர்.
கண்டியில் இருந்து கொழும்பு வரை பாதையாத்திரையாக வந்த இவர்கள், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பிக்குகளுக்கு இடையே உள்ளக மோதல் வெடித்துள்ளது.
போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சில பௌத்த பிக்குகள் தங்களுக்குளேயே வாக்குவாதத்தில் ஈடுபடுவதை கள நிலவரத் தகவல்களின் படி அறிய முடிகின்றது.
மேலும், இதற்கு முன்னர் அங்கு கூடாரம் அமைக்க தேரர்கள் முற்பட்ட போது, அதனை பொலிஸார் அகற்ற முயற்சித்தனர். இதன் காரணமாக, குறித்த இடத்தில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன் பதற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், இந்தப் போராட்டத்தின் காரணமாக, காலி முகத்திடல் வீதியுடனான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து பாதிப்பின் காரணமாக பொதுமக்கள் பலர் பொலிஸ் அவசர சேவைப் பிரிவுக்கு அழைப்பெடுத்து முறைப்பாடளிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் போக்குவரத்தினை சீர்செய்யும் பொருட்டு, பொலிஸார் கடமையில் ஈடுபட்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குகளுக்கு நிலரவத்தை புரிய வைக்கும் பொருட்டு அவர்களுடன் பொலிஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில், சிக்கல்களை புரிந்து கொண்ட ஒரு சில பிக்குமார், வீதிக்கு ஒதுக்குப்புறமாக இருந்து போராட்டத்தை நடத்த முற்பட்டதுடன், போக்குவரத்து சிக்கலை சீர்செய்வதற்கு உதவியுள்ளனர்.
எனினும், பல பிக்குகள் பொலிஸாரின் கருத்துக்களுக்கு உடன்படாமல் தொடர்ந்தும் குழப்பங்களை விளைவித்து வருவதாக களத்தில் இருக்கும் எமது செய்தியாளர் டில்ஷான் வின்சன் அறிவித்தார்.



