புத்தள பிரதேசத்தில் 13 வயது சிறுமி கடத்தி துஷ்பிரயோகம்: 21 வயது இளைஞனுக்கு வலை

புத்தள பிரதேசத்தில் நடைபெற்ற பிங்கம் நிகழ்வொன்றுக்குத் தனது தாயுடன் வருகை தந்த 13 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த 21 வயது இளைஞனைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் புத்தள பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சிறுமி, நவம்பர் 07ஆம் திகதி தனது தாயுடன் புத்தள பிரதேசத்திலுள்ள உறவினர் ஒருவரின் பிங்கம் வீட்டுக்குச் சென்றுள்ளார். இவ்வாறு இருந்தவேளை, சிறுமி காணாமல்போய்விட்டதாகத் தாய் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த புத்தள பொலிஸார், கோனகங்கார பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த சிறுமியை மீட்டுள்ளனர். சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, குடாஓயா பிரதேசத்தில் வசிக்கும் தனது 21 வயதுக் காதலன், பிங்கம் வீட்டிலிருந்த தன்னைக் கோனகங்கார பிரதேசத்திலுள்ள வீடொன்றிற்கு அழைத்துச் சென்று, அங்குத் தங்கவைத்துப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான இளைஞன் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சிறுமி வைத்தியப் பரிசோதனைக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வெல்லவாய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தினேஷ் ரத்நாயக்க மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.