
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெவ்வேறு பிரதேசங்களில் இன்று இடம்பெற்ற சம்பவங்களில் மின்சாரம் தாக்கி இருவரும் கடலில் நீராடச் சென்ற கால்துறை உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் கடலில் மீன்பிடியில் ஈடுபட்ட கடற்றொழிலாளர் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவின் கீழ் உள்ள ஜெயந்திபுரம் வளத்தோர் அந்தோனியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மேல்மாடியில் உள்ள கூரையில் புறாக்கள் எச்சங்களை சம்பவ தினமான இன்று பிற்பகல் 3.00 மணியளவில் சவலால் அள்ளி துப்புரவு பணியில் வீட்டின் உரிமையார் மற்றும் மின்சார திருத்த வேலை செய்யும் நபருடன் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வீட்டின் கூரையின் மேல் அருகில் செல்லும் அதிவேக மின்சார கம்பியில் சவல்பட்டதையடுத்து ஏற்பட்ட மின்சாரம் தாக்கியதில் இருவர் உடல் கருகி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்
மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு
இதில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய வெள்ளையன் மகேந்திரன் மற்றும் மின்சார திருத்த வேலைகளில் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு சந்திரா வீதியைச் சேர்ந்த 45 வயதுடைய கந்தையா மதன் ஆகிய இருவருமே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், மாநகர சபை தீயணைக்கும் படையினர் உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை மட்டு தலைமையக காவல்துறை பிரிவிலுள்ள பாலமீன்மடு கடலில் மீன்பிடிக்க இயந்திர படகில் சென்ற கடற்றொழிலாளர் சம்பவ தினமான இன்று பகல் 12.00 மணிக்கு கரைக்கு திரும்பும் போது இயந்திர படகில் இருந்து 20 வயதுடைய இளைஞன் தவறி கடலில் வீழ்ந்து உயிரிழந்து காணாமல் போயுள்ளதையடுத்து அவரை கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்கள் தேடி வருகின்றனர்
அதேவேளை காவல்துறை உத்தியோகத்தர் அவரது குடும்பத்துடன் மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரையில் குடும்பத்துடன் சம்பவ தினமான இன்று 1.30 மணியளவில் நீராடிக் கொண்டிருந்த போது கடல் நீரில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்
இதில் குருநாகல் மெந்தகம, கனோட்டுவ, தெமட்டலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 57 ஹித்தனதுரயலகே ஜெயவர்தன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக அந்தந்த பிரதேச காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



