இந்திய சினிமாவில் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான சிவாஜி கணேசன் கடந்த 2001ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது குடும்பத்திலிருந்து மூன்றாவது தலைமுறையில் தர்ஷன் நடிக்க வந்திருக்கிறார்.
லெனின் பாண்டியன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சிவாஜி மறைந்து 25 வருடங்கள் ஆனாலும்; அவர் குறித்த உரையாடல் இன்னும் தீரவில்லை. இந்நிலையில் பிரபல நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில் போட்டிருக்கும் பதிவு ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், “வசூல்ராஜா mbbs படத்தில் நடிக்கையில் பிரபு சாரை அவ்வளவு நோண்டி நோண்டி சிவாஜி சாரைப்பற்றி கேட்டுக்கொண்டே இருப்பேன்.
சளைக்காமல் அவரும் சிவாஜி ஐயா அவர்கள் அவரைக் கிண்டல் செய்ததைக்கூட ரசித்து சொல்வார். 1988 வரை தொடர்ந்து நடித்துக்கொண்டு நடிகர் திலகத்தை சினிமா 92ஆம் ஆண்டு தேவர்மகன் படம் வரும்வரை நான்கு வருடங்கள் இடைவெளி கொடுத்தது.
அப்போது 91ஆம் ஆண்டு வந்த சின்னத்தம்பி பாக்ஸ்ஆபீஸ் ஹிட்.. அப்போது சிவாஜி ஐயா வீட்டுக்கு தயாரிப்பாளர்கள் படை எடுக்க… வருபவர்களைப் பார்த்து சிவாஜி அவர்கள் ” வாங்க வாங்க. என்ன கதை.. எனக்கு என்ன கேரக்டர்..எனக் கேட்பதும் அவர்கள் “ஐயா நாங்க சின்னவரை(பிரபு) பார்க்க வந்திருப்பதாக சொல்வதும் வாடிக்கையாக இருந்திருக்கிறது.
ஒருமுறை கையில் மஞ்சள் பையில் பணத்துடன் வந்திருந்த இயக்குநர் தயாரிப்பாளர் இருவரைப் பார்த்து சிவாஜி ஐயா அதே கேள்வியை கேட்க அவர்கள் ” ஐயா சின்னவருக்கு அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் குடுக்க வந்தோம் என்று கூறவும்.
“ஓ நடிகரை பார்க்க வந்திருக்கீங்களா. மேல இருக்காரு போங்க.. என்றதும் அவர்கள் இருவரும் மாடிப்படியேறப் போகையில், “சார் ஒரு நிமிஷம் .. அவருக்கு சம்பளமா படத்துக்கு எவ்வளவு குடுக்கிறீங்க..? என்று கேட்டதும் அவர்கள் “30 லட்சம் குடுக்கிறோம் ஐயா” என்றதும்.. ஒரு விநாடி யோசித்து சிவாஜி ஐயா.. ” ஒரே மாதிரி நடிக்கிறதுக்கா 30 லட்சம்..?” என்று கேட்டதை சொல்லி ஹாஹாஹா என்று சிரித்துவிட்டார்



