
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய ஆறு சுடர்கள் சரவணப் பொய்கையில் விழுந்து அவை ஆறு குழந்தைகளாக மாறின. அந்த ஆறு குழந்தைகளை ஆறு கார்த்திகை பெண்கள் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு குழந்தைகளும் ஒரே குழந்தையாகி உருவானவர்தான் முருகப்பெருமான். முருகப்பெருமானை சீராட்டி வளர்த்த பெருமைக்குரிய கார்த்திகைப் பெண்கள் கார்த்திகை நட்சத்திரமாக விண்ணில் ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் திருக்கார்த்திகை அன்று விரதம் இருந்து வழிபட்டால் முருகப்பெருமானின் அருளுக்கு எளிதில் பாத்திரமாகலாம்.
*தென்காசிக்கு அருகிலுள்ள ஆயக்குடியில் மழலை வரம் வேண்டுவோருக்கு படிப்பாயசம் பிரார்த்தனை மூலம் அருளும் குழந்தை வடிவ குமரனை காணலாம்.
*கல்லால் செதுக்கப்பட்ட வேலை தன் கரத்தில் ஏந்தி செங்கோட்டையன் என்ற திருப்பெயரோடு திருச்செங்கோடு தலத்தில் காட்சி தருகிறார்.
*குடந்தை வியாழ சோமநாதர் ஆலயத்தில் முருகன் காலில் பாதரட்சையுடன் காட்சி அளிக்கிறார்.
*படவேடு குமரன் குன்றில் முருகப்பெருமான் மயில் மீது நின்று கொண்டிருக்கிறார்.
*மேட்டுப்பாளையம் ஞானமலையில் முருகன் ஐந்து முகங்களுடன் காட்சி தருகிறார்.
*உத்திரமேரூரில் முருகப்பெருமான் சடைமுடியுடன் விளங்குகிறார்.
*முருகாஸ்ரமத்தில் நாகத்தின் மீது முருகப்பெருமான் காட்சி தருகிறார்.
*கேரளாவிலுள்ள மஞ்சுகேஸ்வரர் தலத்தில் ஆதிசேஷன் வடிவில் முருகன் காட்சியளிக்கிறார்.
*நாமக்கல் பேளுக்குறிச்சியில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருகிறார்.
*திருப்போரூரில் முருகப்பெருமான் சிங்க ஊர்தியுடன் காணப்படுகிறார்.
*திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளப் பட்டியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் நான்கு திருமுகங்களுடன் காட்சி தருகிறார்.
*குமாரவாடி என்ற தலத்தில் உள்ள அழகேஸ்வரப் பெருமாள் கோயிலில் முருகப்பெருமான் யோக நிலையில் அமர்ந்திருக்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.
*கோவை மாவட்டம் சங்கரகிரி துர்கம் ரயில் நிலையத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்செங்கோட்டு மலை மீது காட்சி தரும் பால முருகன் நவபாஷாணத்தால் ஆனவர்.



