நபிகள் நாயகம் குறித்த சமூக ஊடகப் பதிவு பற்றிய குற்றச்சாட்டின் கீழ் சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கைத் தமிழரை, மரண தண்டனையிலிருந்து விடுவிக்கும் நோக்கில், அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் சௌதி அரேபிய சட்ட நிபுணர்களின் ஒன்றிணைந்த குழுவில் முயற்சியில் இந்த மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீடு எவ்வாறு செய்யப்பட்டது?
நபிகள் நாயகம் குறித்த பேஸ்புக் பதிவுக்காக சௌதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழரான சிவராசா அனோஜனுக்கு கடந்த மாதம் 17ஆம் தேதி, அந்த நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அனோஜனுக்கு அந்த நாட்டு நீதிமன்றத்தினால் ஏற்கனவே 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 3 மில்லியன் ரியால் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், அதனை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீடு செய்யப்பட்டதை அடுத்தே மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அனோஜன் சார்பில் சௌதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகம் மேன்முறையீடு செய்திருந்த அதேவேளை, அனோஜனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை வலுவாக்குமாறு கோரி அந்நாட்டு அரச தரப்பும் மேன்முறையீடு செய்திருந்தது.
இந்த இரண்டு மனுக்களையும் ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அரச தரப்பு தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு, அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம், இலங்கையில் மாத்திரமன்றி, சர்வதேச அளவில் பேசுப்பொருளாகியுள்ளது.
இந்த மரண தண்டனை தொடர்பான தீர்ப்பு ஆவணங்கள், சௌதி அரேபியாவிலுள்ள தூதரகத்திற்கு கிடைக்கப் பெற்றதை அடுத்து, அந்த ஆவணங்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், அனோஜனின் பெற்றோர், சகோதரர் உள்ளிட்ட உறவினர்களை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார்.
அனோஜனின் விடுதலை தொடர்பில் தேவையான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவரை விடுதலை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக அவர் பெற்றோரிடம் உறுதி வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் சார்பில் மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் உள்ளிட்ட ஜனாதிபதி வழக்கறிஞர்கள் இருவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் அசாத் நவாவி, ஜனாதிபதி வழக்கறிஞர்களான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் அடங்கிய குழு கடந்த வாரம், சௌதி அரேபியா நோக்கி பயணித்தது.
இவ்வாறு சௌதி அரேபியா நோக்கி பயணித்த குழுவினர், சௌதி அரேபியாவிலுள்ள சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழுவுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடாத்தி, அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான மனுவை தயாரித்திருந்தது.
இவ்வாறு இறுதி செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு, அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் மேன்முறையீடு செய்யப்பட வேண்டிய கட்டாயம் காணப்பட்ட நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பாகவே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
”அனோஜன் சார்பில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளோம். அந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சௌதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகம் எமக்கு அறிவித்தார்கள். வேறு ஒன்றும் எங்களிடம் சொல்லவில்லை. எப்போது விசாரிக்கப்படும் என்றும் சொல்லவில்லை.” என அனோஜனின் சகோதரர் தெரிவித்தார்.
அனோஜனின் விடுதலை தொடர்பில் சர்வதேச ரீதியில் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
சௌதி அரேபியாவினால் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக ரத்து செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இவர் மீதான குற்றச்சாட்டுகள் முழுமையாகவே கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டமையினால், அவரை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது கருத்தை தெரிவித்த காரணத்தினால் எவரும் சிறை வைக்க முடியாது என்பதுடன், மரண தண்டனை போன்றதொரு தண்டனை வழங்கப்படக் கூடாது எனவும் அந்த அமைப்பின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவிற்கான சர்வதேச மன்னிப்புச் சபையின் பிராந்தியப் பணிப்பாளர் ஹேபா மொராயெப் தெரிவித்துள்ளார்.
”இந்த வழக்கு, மரண தண்டனை பயன்படுத்தப்படும் விதம் மற்றும் சௌதி அரேபியாவின் குற்றவியல் நீதித்துறை அமைப்பில் காணப்படும் தன்னிச்சையான போக்குகள் குறித்து மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் தண்டனை, இரண்டு மாதங்களுக்குள் மேன்முறையீட்டில் மரண தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.”
”ஒருவர் தனது கருத்துகளை வெளிப்படுத்தியதற்காக, அவை அவமதிப்பானவை அல்லது புண்படுத்தக்கூடியவை எனக் கருதப்பட்டாலும், சிறையில் அடைக்கப்படவோ, மரண தண்டனையை எதிர்கொள்ளவோ கூடாது. சிவராசா அனோஜன் தனது கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையைப் பயன்படுத்தியுள்ளார். அவரைத் தூக்கிலிடுவது, அவரது உயிரைப் பறிக்கும் தன்னிச்சையான செயலாக அமையும்.
சௌதி அரேபிய அதிகாரிகள் இந்த மரண தண்டனையை உடனடியாக இரத்துச் செய்து, அவரது குற்றத்தீர்ப்பை ரத்துச் செய்து, அவரை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின்படி, மரண தண்டனையானது “மிகக் கடுமையான குற்றங்களுக்கு” மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்கள் வேண்டுமென்றே ஒருவரைக் கொலை செய்வதை உள்ளடக்கியதாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. சௌதி அரேபியாவில் அதிர்ச்சியளிக்கும் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன” என ஹேபா மொராயெப் மேலும் கூறியுள்ளார்.
சர்வதேச மன்னிப்பு சபையின் தரவுகளுக்கு அமைய, இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் 05 ம் தேதி வரையான நிலவரத்தின் பிரகாரம், சௌதி அரேபியாவில் 175 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு பிரஜைகள் என அந்த சபை கூறுகின்றது.
சுமார் 20ற்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த சுமார் 94 பேருக்கு இந்த ஆண்டில் மாத்திரம் சௌதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிடுகின்றது..



