வெற்றி சேனல் மலையாள மொழியில் கொண்டு செல்லும் விஜய்

 

தவெகவின் அதிகாரப்பூர்வ செய்தி சேனலாக வெற்றி விரைவில் தனது ஒளிபரப்பை தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக மலையாளத்தில் வெற்றி சேனலை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கு விஜயம் என்று பெயர் வைத்துள்ளனர்.

“V” என்பது தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் அடையாளமாக மாறிவிட்டது. தனது கட்சி பெயரை தொடர்ந்து, மாநில அரசு ரீதியாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள், மாநாடுகள் உள்ளிட்டவற்றிலும் இந்த “V” என்பது வெற்றி என்ற பெயரில் முன்னிலைப் படுத்தப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள செய்தி சேனல்களுக்கு போட்டியாக தங்களுக்கென்று பிரத்யேகமாக ஒரு சேனலை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கான டிஜிட்டல் வலைதளப் பக்கங்கள் தயாராகி விட்ட நிலையில், ஒளிபரப்பிற்கான சோதனை ஓட்டங்கள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு ”வெற்றி” சேனல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மற்ற அரசியல் தலைவர்களை போல் அல்லாமல் ஊடக வெளிச்சம் அதிகம் கொண்டவராக முதலமைச்சர் விஜய் திகழ்கிறார். ஏனெனில் இவருடைய ஒவ்வொரு நகர்வை தமிழக மக்கள் விரும்பி பார்க்கின்றனர். தேடித் தேடி பார்க்கின்றனர். எனவே இவர் தொடர்பான கவரேஜ்களுக்கு அதிகம் முக்கியத்துவம் தர பல்வேறு சேனல்களும் ஆர்வம் காட்டுகின்றன. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வியூகங்களை வகுத்து கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். இதன் நீட்சி தற்போது வட இந்தியா வரை நீண்டுள்ளது.

முதலமைச்சராக விஜய் என்னென்ன செய்கிறார், அறிவிக்கிறார், தினசரி செயல்பாடுகள் என ஒவ்வொன்றையும் வீடியோக்களாக வெளியிட்டு வட இந்திய மக்கள் மத்தியில் ஆழமாக பதிய செய்யும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த சூழலில் தங்களது வெற்றி டிஜிட்டல் செய்தி சேனலை தேசிய அளவில் பல மொழிகளில் கொண்டு செல்வதற்கு தவெக தலைமை முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மலையாள மொழியில் ”விஜயம்” என்ற பெயரில் தங்கள் சேனலை அறிமுகம் செய்யவுள்ளனர். இதுபற்றி தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

விஜயம் என்றால் வெற்றி
மலையாளத்தில் “விஜயம்” என்றால் வெற்றி என்று அர்த்தம்.
இந்த வார்த்தையானது சமஸ்கிருத மொழியில் இருந்து வந்தது.
தென்னிந்திய மொழிகள் பலவற்றில் இந்த வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்.
விஜயம் என்ற வார்த்தையில் நேரடியாகவே விஜய் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.
கேரளாவில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு
ஏற்கனவே கேரளாவில் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தமிழகத்தை போல அண்டை மாநிலமான கேரளாவிலும் விஜய் நடித்த படங்கள் வசூலில் சாதனை படைத்துள்ளன. இங்குள்ள செல்வாக்கை தொலைநோக்கு அடிப்படையில் பயன்படுத்தி கொள்ள அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் தங்களது கிளையை கேரளாவில் விரிவுபடுத்த தவெக ஆலோசித்து வருவதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன. இதற்கு அடித்தளமாக விஜயம் சேனல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தேசிய அளவில் விரிவடையும் வெற்றி சேனல்
இந்த சேனல் மூலம் தமிழகத்தின் அரசியல் சூழல், முதலமைச்சர் விஜய்யின் அரசியல் செயல்பாடுகள், தவெக ஆட்சி குறித்த பார்வைகள், கேரளாவின் முக்கிய அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை மலையாள மொழி பேசும் மக்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளனர். தமிழில் தொடங்கிய வெற்றி, இனிமேல் பல மொழிகளில் தொடரும் என்று குறிப்பிட்டு கவனம் ஈர்த்துள்ளனர்.