ஆங்கிலத்தில் அமெரிக்கன் நைட்ஷேட், க்ளாஸ்ஸி நைட்ஷேட், பாய்சன் பெர்ரி, சோடோமின் ஆப்பிள் என்று வழங்கப்படும் நைட்ஷேட் குடும்பத்தைச் சார்ந்த மணத்தக்காளி, அமெரிக்காமற்றும் ஐரோப்பியர்களால் விஷ செடியாகத்தான் கருதப்படுகிறது.
வயிற்றுப்புண்ணுக்கு மருந்தென வழங்கப்படும் ஓர் இயற்கைப் படைப்பு மற்றொரு இடத்தில் விஷமாகுமா எனும் கேள்வியுடன், மணத்தக்காளி குணங்களை முழுமையாகத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.தக்காளி போல ஆனால், சிறிய அளவில் மணிமணியாகக் காய்கள் இருப்பதால் மணித்தக்காளி என அழைக்கப்படும் மணத்தக்காளி, மிளகுத் தக்காளி, சுக்குட்டிக்கீரை, மணல் தக்காளி, சிறுன்குன்னி, உலகமாதா, விடைக்கந்தம், கண்ணிகம், காகதேரி, காளி, துகமாசி, குட்டலத் தக்காளி, வனங்காத்தாள், காகசிறுவாசல், ரெத்தத்திர மானப்பழத்தி, சுரனாசினி, வாயசம், சிர்பொட்டி, குர்கமாய், சாஜூ செட்டு, ககச்சி, காக்கி, காச்சி, காஹமாச்சி என பல வியத்தகு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
பெயர்களைப் போலவே, மணத்தக்காளியின் மருத்துவ குணங்களும் வியக்கத்தக்கது என்பதை ‘‘காய்க்கு கபந்தீருங் காரிகையே! அவ்விலைக்கு வாய்கிரந்தி வேக்காடு மாறுங்கண்..!” என்ற, பதார்த்த குணசிந்தாமணி வரிகள் மூலம் அறிந்துகொள்ளவும் முடிகிறது. மணத்தக்காளியின் இலை, காய், கனி, வேர் மற்றும் தண்டு என அனைத்தும் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது என்பதே உண்மை.டாக்டரை தேடு
அதிக நார்ச்சத்து, கலோரிகள் மற்றும் அதிக நீர்த்தன்மை கொண்ட மணத்தக்காளி இலையில் வைட்டமின்கள் A, C, B குறிப்பாக ரிபோஃபிளேவின், நியாசின், ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து, பாஸ்ஃபரஸ், கால்சியம், மெக்னீசியம் ஆகிய அத்தியாவசிய தாதுக்களும் அதிகம் உள்ளன. இதிலுள்ள பாலிஃபீனால்கள், ஆன்த்தோ சயனின்கள், சப்போனின், டானின் மற்றும் சொலானின், சொல்ஸ்மார்ஜின், கிளைக்கோ ஆல்கலாய்டுகள் போன்ற தாவரச்சத்துகள் மணத்தக்காளியின் மருத்துவ குணங்களுக்கு காரணமாக விளங்குகிறது.வாய்ப்புண்ணுக்கான சிறந்த மூலிகையாகவும், பசியின்மை, வயிற்று அமிலம், குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு, பெருங்குடல் அழற்சி நோய்கள், குடல் வீக்கம், குடல் புழுக்கள், மலச்சிக்கல், மூல நோய் ஆகிய செரிமான மண்டலம் சார்ந்த பிரச்னைகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
வியர்வையையும் சிறுநீரையும் பெருக்கி, உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றும் தன்மை கொண்டதால் மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய்கள், கல்லீரல் புற்று, பித்தப்பை அழற்சி, சிறுநீர்த் தொற்று, சிறுநீரகக் கற்கள் ஆகியவற்றிலும், நோயெதிர்ப்பு ஆற்றல் மிக்கதால் காய்ச்சல், இருமல், சளி, ஆஸ்துமா, தொண்டை வீக்கம், வாந்தி, கண் மற்றும் தோல் நோய்கள் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது. மேலும், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் உள்ளிட்ட வாழ்க்கை முறை நோய்களைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வினை நீக்கும் அருமருந்தாகவும் உதவுகிறது.சுவையான உணவு உண்
பெண்களுக்கான சிறந்த உணவாக, மணத்தக்காளி இலையும் பழமும் உள்ளது. பெண்களின் மாதவிடாயின்போது ஏற்படும் வலி மற்றும் உடற்சோர்வை அகற்றுவதுடன், கருவுறுதல் விகிதத்தைக் கூட்டி, பிரசவத்தை எளிதாக்கவும் உதவுகின்றன. அதிகப்படியான களைப்பு உள்ளவர்கள், இரவில் படுக்கும் முன் மணத்தக்காளி கீரை சாப்பிட்டால், உடல் களைப்பை போக்குவதோடு, நல்ல உறக்கத்தையும் தருவிக்கிறது என்கிறது சித்த மருத்துவம். மணத்தக்காளி இலைச் சாற்றை தேமல், சிரங்கு உள்ளிட்ட சரும நோய்களில் தடவ, பலன்கள் கிட்டும் என்கிறது
ஆயுர்வேத மருத்துவம்.
பல நூற்றாண்டுகளாய் நம்மிடையே பயன்பாட்டில் உள்ள மணத்தக்காளி, ‘நித்யனி’ அதாவது, எப்போதும் நிலைத்திருக்கும் வரம் என சாம வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம்மிடையே மட்டுமன்றி, கிரேக்க மற்றும் எகிப்திய மருத்துவத்திலும் காசநோய், தொழுநோய், சரவாங்கி, மூட்டு வீக்கம் ஆகியவற்றில் மணத்தக்காளி யன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பதினைந்தாம் நூற்றாண்டில், சீனர்களின் வறட்சிக்கால உணவாய் மணத்தக்காளி பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், விஷம் எனப் பொருள்படும் ‘Deadly Nightshade’ என்கிற இதன் ஆங்கிலப் பெயர் சற்று கலக்கத்தைத் தருகிறது என்றாலும், நச்சுத்தன்மை மணத்தக்காளியில் எதில் உள்ளது எனவும் ஆராயப்பட்டுள்ளது.காய்கறி வாங்கு
மணத்தக்காளியில் உள்ள சொலானின் என்ற தாவரப்பொருள் மற்றும் க்ளைக்கோ ஆல்கலாய்டுகள் அளவுக்கதிகமாக உட்கொள்ளப்படும்போது, வயிற்று வலி, வாந்தி, மயக்கம், இதய படபடப்பு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சமைக்கப்படாத மணத்தக்காளிகாய்களில்தான் இந்த சொலானின் அளவு அதிகம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே Deadly Nightshade என்ற பெயருள்ள மணத்தக்காளியை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலிய நாடுகள் தடை செய்துள்ளன. அதேசமயம் சமைக்கப்படும்போது இதன் நச்சுத்தன்மை நீங்கி, பல பயன்களையும் தருவதால், தடை நீக்கம் விரைவில் இதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
கசப்பும் துவர்ப்பும் சேர்ந்த மண்மணம் மிகுந்த மணத்தக்காளி கீரையை சூப் செய்தோ, மசியல் மற்றும் பொரியலாக சமைத்தும் உணவில் சேர்க்கலாம். இதன் காய்களை குழம்பாக அல்லது வற்றலாக சமைத்து பயன்படுத்தலாம். நன்கு பழுத்த கருப்பு மற்றும் சிவப்புநிற மணத்தக்காளி பழங்களை அப்படியே உட்கொள்ளலாம். வற்றலாகவும் பயன்படுத்தலாம். நம் நாட்டில் மட்டுமல்லாது, இதன் இலைகளும், காய்களும் கானா, எத்தியோப்பியா, தென்னாப்பிரிக்கா நாடுகளிலும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. தூக்கமின்மைக்கான மருந்தாய் ஜெர்மானியர் இதனைப் பயன்படுத்துகின்றனர். துருக்கியில், ஹோர்ட்டா என்ற சாலட்டில், மணத்தக்காளி கீரை சேர்க்கப்படுகிறது. இதன் சிறு பழங்கள் கொண்டு, உன்சோம்போ, நீர்த்தன்மை மிக்க ஜாம் தயாரிக்கப்படுகிறது.டாக்டரை தேடு
விதைகள் மூலம் வளரும் இயல்புகொண்ட மணத்தக்காளி, வீட்டு தோட்டத்திலும், விற்பனைக்கும் விளைவிக்கப்படுகிறது. சிறிய செடி வகையைச் சார்ந்த மணத்தக்காளி, ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படுகிறது.
ஆக… அன்னையின் அன்பிற்கு நிகராக, இயற்கை தந்த வரப்பிரசாதமான மணத்தக்காளி கீரையை உண்போம்.! வலிமையுடன் கூடிய ஆரோக்கியத்தைப் பெறுவோம்..!



