நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி போதேகோஷி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில், சுற்றுவட்டார மாவட்டங்களில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வெளிநாட்டினர் உட்பட 5 ஆயிரத்துக்கும ் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்கள் பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை. இந்நிலையில், நீண்ட காலமாக காணாமல் போனவர்களை இறந்தவர்களாக அறிவிக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, 12 நாடுகளின் தூதரகங்கள் மூலம் 452 வெளிநாட்டினரின் விவரங்கள் பெறப்பட்டன. இவர்களில், 213 பேர் இந்தியர்கள், அதனை தொடர்ந்து 85 பேர் சீனர்கள், 69 பேர் அமெரிக்கர்கள், 32 பேர் பிரிட்டிஷ் நாட்டினர் மற்றும் 27 பேர் ஆவர். நேபாளத்தின் தேசிய பேரிடர் மற்றும் மேலாண்மை ஆணையம், மாயமான 213 இந்திய குடிமக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவர்களது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஆட்சேபனைகள் பெறப்பட்டு வருகின்றன.
காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம், காணாமல் போன இந்தியர்களின் குடும்பங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்திய தூதரகம், இந்த பட்டியலை மறுபரிசீலனை செய்து, ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் டிசம்பர் 2ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு கேட்டு கொண்டுள்ளது. அதற்கு பிறகு, நேபாள அரசு இறுதி பட்டியலை தயாரித்து அறிவிக்கும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் நேபாளத்தில் உள்ள சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து இறப்பு சான்றிதழ்களை பெறும் செயல்முறையை தொடங்குவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. இந்த செயல்பாட்டில் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து கூடுதல் தகவல்களும் ஆவணங்களும் தேவைப்படலாம் என்றும், மேலும் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.



