
இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) பாரிய நிதியியல் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் விமான எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள தொடர் உயர்வு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் சர்வதேச பொருளாதார நிலவரங்களால் ஏற்பட்டுள்ள நிதியியல் இழப்புகள் குறித்து விரிவான அறிக்கையொன்றைத் தயாரிக்க நிறுவனம் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அரை ஆண்டு நிதி அறிக்கையின்படி, 2026/27 நிதியாண்டின் முதலாம் காலாண்டில் மட்டும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வரிக்கு முந்தைய நஷ்டமாக (Pre-tax Loss) 35.6 பில்லியன் ரூபாயைப் பதிவு செய்துள்ளது.
இக் காலப்பகுதியில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 82.8 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது (கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் இது 62.6 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டது).
வருமானம் உயர்ந்த போதிலும், செயல்பாட்டுச் செலவுகள், விமானப் பராமரிப்புக் கட்டணங்கள், நாணய மாற்று வீத இழப்புகள் மற்றும் அதிகரித்து வரும் கடன் சேவைச் செலவுகள் காரணமாக இப் பாரிய நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் குழுமத்திற்குச் சொந்தமான சிறிலங்கன் கேட்டரிங் நிறுவனம் (SriLankan Catering Company) 3.4 பில்லியன் ரூபாய நிகர இலாபத்தைப் பதிவு செய்துள்ளதால் குழுமத்தின் ஒட்டுமொத்த நிகர இழப்பு 32.2 பில்லியன் ரூபாயாகச் சற்று குறைந்துள்ளது.
2026 ஜூன் மாத நிலவரப்படி, நிறுவனத்தின் மொத்தச் சொத்துக்களின் மதிப்பு 209.9 பில்லியன் ரூபாயாக உள்ள அதேவேளையில், அதன் மொத்தப் பொறுப்புகள் 561.4 பில்லியன் ரூபாயாகப் பதிவாகி நிறுவனத்தின் நிதியியல் ஸ்திரத்தன்மையைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
இந்தநிலையில் மத்திய கிழக்கில் தொடரும் மோதல்கள் காரணமாக விமானப் பாதைகள் முடங்கியுள்ளதுடன் கடுமையான விமான எரிபொருள் தட்டுப்பாடு உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



