இதய செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கும், இதய மாற்று சத்திர சிகிச்சைக்கு உடல் தகுதி பெறாதவர்களுக்கும் இதயத்தை இயங்கச் செய்திடும் வகையில் கண்டறியப்பட்ட நவீன சாதனம் தான் லெஃப்ட் வென்ட்ரிகுலர் அசிஸ்ட் டிவைஸ் எனும் கருவி என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எம்மில் சிலருக்கு கட்டுப்படுத்தாத ரத்த சர்க்கரையின் அளவு காரணமாக இதயத்தின் செயல்பாட்டில் பாரிய பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
மேலும் சிலருக்கு இதய செயலிழப்பு – ஐம்பது முதல் அறுபது சதவீதத்தில் வரை ஏற்பட்டிருக்கும். இவர்களுக்கு தொடர்ந்து மருந்தியல் சிகிச்சை மூலமாகவே சிறிதளவு நிவாரணம் கிடைத்து வரும்.
இந்நிலையில் சிலருக்கு மருந்தியல் சிகிச்சை பலனளிக்காத போதும் உடனடியாக இதய மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள இயலாத நிலையில் இருக்கும் போதும் இதயத்தின் செயல்பாட்டிற்கு இத்தகைய இடது வென்ட்ரிகுலர் உதவி சாதனத்தை பொருத்திக் கொள்ளுமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இத்தகைய நவீன கருவியை இதயத்தில் பொருத்திக் கொள்வதன் மூலம் இதய செயலிழப்பு பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறலாம். இதயத்தில் பொருத்தப்பட்ட இந்த பிரத்யேக கருவி உடல் முழுவதும் ஓக்சிஜன் நிறைந்த குருதியை பம்ப் செய்கிறது.
வேறு சிலருக்கு வயது முதுமையின் காரணமாக இதய மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள இயலாத நிலை இருக்கும். இவர்களுக்கும் இத்தகைய சாதனத்தை இதயத்தில் பொருத்திக் கொண்டால் நிவாரணம் பெறலாம்.
பொதுவாக இஸ்கிமிக் இதய பாதிப்பு- கார்டியோமயோபதி அல்லது மாரடைப்பிற்கு பின்னரான நிலையில் இத்தகைய கருவியை பொருத்திக் கொள்வது இதய செயலிழப்பை தடுக்கும் நிவாரணமாக இருக்கும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
அத்துடன் விரிவடைந்த இதய தசை நோய் பாதிப்பு – இதய ரத்த நாள பிரச்சனைகள் – மாரடைப்புக்கு பிறகு ஏற்படும் தழும்பு- ஆகியவற்றின் காரணமாக ஏற்படும் இதய செயலிழப்பிற்கு இத்தகைய சிகிச்சை முழுமையான நிவாரணத்தை வழங்குகிறது எனவும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
மேலும் இதயத்தில் இருந்து குருதியின் வெளியேற்றம் 25 சதவீதத்திற்கும் கீழாக இருக்கும் நிலையில் இத்தகைய சாதனங்கள் தங்களுடைய பணியை தொடங்குகின்றன. இத்தகைய தருணங்களில் எம்முடைய உடலில் உள்ள உறுப்புகள் ஆரோக்கியமாக இயங்குவதற்கு தேவையான குருதியை இந்த சாதனங்கள் வழங்குகின்றன.
மேலும் இத்தகைய சாதனங்களில் பல வகைகள் உள்ளது என்றும், அது எம்மாதிரியான இதய நோயாளிகளுக்கு பொருத்தமானது என்பதை வைத்திய நிபுணர்கள் துல்லியமாக அவதானித்து பொருத்துவார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.



