சானிட்டரி பேட்களை எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும், பீரியட் பேண்டி நீண்ட நேரம் பயன்படுத்தலாமா? மாதவிடாய் காலத்தில் தொற்று பாதிப்பை தடுக்கும் வழிகளை மகப்பேறு மருத்துவர் விளக்குகிறார்
மாதவிடாய் என்பது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பெண்களின் உடலில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் ஒரு இயல்பான உயிரியல் செயல்முறையாகும். இந்த நாட்களில், கருப்பையின் உள்படலத்திலுள்ள திசுக்களும் ரத்தமும் பிறப்புறுப்பு வழியாக உடலை விட்டு வெளியேறுகின்றன. மாதவிடாய் காலத்தில் முறையான சுகாதாரத்தை பின்பற்றுவது தொற்றுகளை தடுக்கவும், துர்நாற்றத்தை குறைக்கவும், உங்களை வசதியாக வைத்திருக்கவும் மிகவும் அவசியமாகும்.
மகப்பேறு மருத்துவர் Dr.சேதனா வி கூறியதாவது, “சானிட்டரி பேட், டாம்பூன், மாதவிடாய் கப்கள் அல்லது பீரியட் பேண்ட்டிகளை மாற்றுவதற்கு முன்பும் பின்பும் கைகளை சுத்தமாகக் கழுவாமல் இருப்பது மாதவிடாய் காலத்தில் பலரும் செய்யும் மிகப்பெரிய தவறாகும். இதனால் கைகளில் உள்ள பாக்டீரியாக்கள் பிறப்புறுப்பு பகுதிக்கு எளிதில் பரவி தொற்றுகளை உண்டாக்குகின்றன” என்றார்.
ரத்தமும் ஈரப்பதமும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் தேங்கும்போது பாக்டீரியாக்கள் வேகமாக வளரும். எனவே சானிட்டரி பேட் மற்றும் டாம்பூன், 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
அதிகபட்சமாக 8 மணி நேரத்திற்கு மேல் ஒரு டாம்பூனை அப்படியே வைத்திருக்கக் கூடாது. இல்லையெனில் பாக்டீரியா பெருகி தோல் எரிச்சல், பிறப்புறுப்பு தொற்று மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில் உயிருக்கே ஆபத்தான ‘டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம்’ போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
ஒவ்வொரு முறை பயன்படுத்தும் முன்பும் பின்பும் மாதவிடாய் கப்களை சுத்தமான நீரில் கழுவ வேண்டும். ஒரு மாதவிடாய் சுழற்சி முடிந்த பிறகு, அதைத் கொதிக்கும் நீரில் போட்டு கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
பீரியட் பேண்டி பொறுத்தவரை ரத்தத்தை உறிஞ்சியவுடன் மாற்றிவிட வேண்டும். மென்மையான சோப்புத்தூள் கொண்டு நன்றாகத் துவைத்து, வெயிலில் காயவைக்க வேண்டும். ஈரமான பேண்ட்டிகளை அணிந்தால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் ஏற்படும்.
பிறப்புறுப்பின் வெளிப்புறப் பகுதியை சுத்தமான நீரைகொண்டு மட்டுமே மென்மையாக கழுவ வேண்டும். கடுமையான சோப்புகள் அல்லது பிறப்புறுப்பின் உட்பகுதியைக் கழுவும் Douching முறையை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
ரத்தப் போக்கின் அளவிற்கு ஏற்ப சரியான தயாரிப்புகளை தேர்வு செய்யவும்.அவற்றை சரியான இடைவெளியில் மாற்றவும். பயன்படுத்தாத பேட்களை சுத்தமான, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும். மாதவிடாய் காலத்தில் உடல் வறட்சியைத் தடுக்க நிறைய தண்ணீர் குடிக்கவும். காட்டன் உள்ளாடைகளை மட்டுமே அணியவும்
தொடர்ச்சியான அரிப்பு, வழக்கத்திற்கு மாறான வெள்ளைப்படுதல், கடுமையான துர்நாற்றம், காய்ச்சல் மற்றும் அடிவயிற்றில் கடுமையான வலி, சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது அசௌகரியம் ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
இந்த எளிய சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் மாதவிடாய் நாட்களைப் பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றிக்கொள்ளலாம்.



