அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில், நீச்சல் குளத்தில் மூழ்கிய 7 வயது சிறுவனைக் காப்பாற்றத் தவறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 48 வயதான தமிழ் பெண் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சிறுவன் கடந்த ஏப்ரல் மாதம் நீச்சல் குளத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே, லூசியானா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் சுகந்தினி சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறித்த மருத்துவர், அயல்வீட்டுச் சிறுவர்களை நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றிருந்தபோது, குஷில் நீரில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவன் நீரில் தத்தளித்ததை அவதானித்த போதிலும், அவருக்கு உடனடியாக உதவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனப் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பொலிஸாரின் விசாரணைகளின்படி, சிறுவன் ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக நீருக்கு அடியில் இருந்ததாகவும், பின்னர் மற்றொருவரால் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மூளைக்கு ஏற்பட்ட கடுமையான பாதிப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், சில நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையின்போது, சம்பவத்தைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து போனதாக மருத்துவர் பொலிஸாரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், சிறுவனுக்கு உதவாமல் அலட்சியமாகச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மருத்துவருக்கு எதிராக முதலாம் நிலை மனிதப் படுகொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஆறு மாத கால விசாரணைகளுக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எவ்வாறாயினும், இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டியவையாகும். சம்பவம் தொடர்பான மேலதிக உத்தியோகபூர்வ விபரங்கள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.



