அக்வான் புயல் தீவிரமடைந்து ஆந்திரா – ஒடிசா இடையே கரையை கடக்க வாய்ப்பு

அக்வான் புயல் தீவிரமடைந்து வருவதாகவும், இது வரும் 20ம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் நர்சாபூருக்கும் ஒடிசாவின் பூரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதி மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள அக்வான் தீவிர சூறாவளி புயலானது, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது.

இன்று (நவ. 18) காலை 8.30 மணி நிலவரப்படி இந்தப் புயல் அதே பகுதியில் மையம் கொண்டுள்ளது. இது சென்னைக்கு கிழக்கே சுமார் 570 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்துக்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 580 கி.மீ. தொலைவிலும்,

மசூலிப்பட்டினத்துக்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும், திரிகோணமலைக்கு (இலங்கை) வடகிழக்கே 660 கி.மீ. தொலைவிலும், கோபால்பூருக்கு (ஒடிசா) தெற்கே 710 கி.மீ. தொலைவிலும், பூரிக்கு (ஒடிசா) தெற்கே 770 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையை நோக்கி நகரும் இந்த புயல், நவம்பர் 20-ம் தேதி நண்பகல் வாக்கில், வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் நர்சாபூர் மற்றும் பூரிக்கு இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இது தீவிர சூறாவளி புயலாக இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வரையிலும், அவ்வப்போது 110 கி.மீ. வேகத்திலும் இருக்கும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.