
ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 19 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கெமரோவோ பிராந்தியத்தில் உள்ள யாகுனோவோ கிராமத்திற்கு அருகிலுள்ள மக்கள் வசிக்காத பகுதியொன்றில், வழக்கமான விமானப் பயணத்தில் ஈடுபட்டிருந்த An-12 ரக இராணுவ விமானமே வீழ்ந்து நொறுங்கியுள்ளது.
விமானம் வானிலிருந்து ஒளியுடன் கீழே விழுந்து வெடித்துச் சிதறும் காட்சிகள் அப்பகுதியிலிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் தொழில்நுட்பக் கோளாறே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனப் பாதுகாப்பு அமைச்சு கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் இது குறித்து விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் ஏற்பட்ட தீயை அவசர மீட்புக் குழுவினர் உடனடியாக அணைத்துள்ளதாகவும், அப்பகுதி பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுப் பாதுகாக்கப்படுவதாகவும் உள்ளூர் ஆளுநர் இலியா செரெட்யுக் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற ஆளுநர், விசாரணை அதிகாரிகளுக்கு உதவுவதே தற்போதைய பிரதான பணி எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதங்கள் மற்றும் இராணுவ வீரர்களைக் கொண்டு செல்வதற்கும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கும் ரஷ்ய இராணுவத்தால் பரவலாகப் பயன்படுத்தப்படும் விமானங்களில் An-12 ரக விமானம் முக்கியமானதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது விமானத்தில் சரக்குகள் ஏதும் இருந்தனவா என்பது குறித்து உடனடித் தகவல்கள் வெளியாகவில்லை.



