
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மூக்கனூர் கிராமத்தில் பாம்பு கடித்து இரண்டு பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் வருவாய் கோட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய சிகிச்சை அளிக்காததே குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டி அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் – புஷ்பா தம்பதியினரின் பெண் குழந்தைகளான தேவதர்ஷினி மற்றும் தேவஜனனி ஆகிய இருவரும் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மேற்கொண்ட முதற்கட்டப் பரிசோதனையில், தேவஜனிக்கு பாம்பு கடித்ததற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், மற்றொரு குழந்தையான தேவதர்ஷினி மற்றும் தாய் புஷ்பா ஆகியோருக்கு பாம்பு கடித்ததற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே உயிரிழப்புக்கான காரணம் முழுமையாகத் தெரியவரும் என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே, சம்பவம் குறித்து விசாரணை நடத்த வருவாய் கோட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் பத்மஜா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் முருகன் மூக்கனூர் கிராமத்திற்கு நேரில் சென்று உயிரிழந்த குழந்தைகளின் தாய் புஷ்பா, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது, குழந்தைகளைச் சிகிச்சைக்காக புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, அங்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும், இரவு நேரத்தில் ரத்தப் பரிசோதனை மேற்கொள்வதற்குப் போதிய பணியாளர்கள் இல்லாததால், மருத்துவப் பணியாளர்கள் அலட்சியமாகச் செயல்பட்டு குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்றும், மருத்துவர்களின் அலட்சியப் போக்கே இரண்டு குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணம் என்றும் கூறி வருவாய் கோட்டாட்சியரிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்திய வருவாய் கோட்டாட்சியர் முருகன், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த விசாரணை தொடர்பான அறிக்கையை அவர் மாலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு குழந்தைகளின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் குறித்து விசாரணை அறிக்கைக்குப் பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



