
அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் டி.சி.-யில் ‘டர்ட்டி பாம்’ எனப்படும் கதிரியக்க குண்டு அல்லது ரசாயனத் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க உளவுத்துறை தகவல்களை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தைத் தனது நிர்வாகம் மிகத் தீவிரமாக விசாரித்து வருவதாகவும், இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அணு ஆயுதத்தைப் போன்று பெரிய அளவிலான அணு வெடிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், சாதாரண வெடிபொருட்களுடன் கதிரியக்கத் துகள்களைக் கலந்து வெடிக்கச் செய்யும் ‘டர்ட்டி பாம்’ தாக்குதல், குறிப்பிட்ட பகுதியில் கதிரியக்க மாசுபாட்டையும் சுகாதார அபாயங்களையும் ஏற்படுத்தக்கூடியது என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். முன்னதாக, அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகளான கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் உள்ளிட்ட பலருக்கு அச்சுறுத்தல்கள் இருந்ததைத் தொடர்ந்து, அவர்கள் பாதுகாப்புக் கருதி ராணுவக் குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் மார்க்வெய்ன் முல்லின், வாஷிங்டன் போன்ற நகரங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தால் அது முழு அளவிலான போருக்கு வழிவகுக்கும் என்று சிஎன்பிசி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். மறுபுறம், ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி, இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று மறுத்துள்ளதோடு, எந்தச் சூழ்நிலையிலும் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஈரான் ஏற்காது என்றும் ஐ.நா.-வுக்கான ஈரான் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
தற்போதைய நிலையில் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு உடனடியான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் லாரன் பிஸ் தெரிவித்துள்ள போதிலும், அனைத்து விதமான சாத்தியக்கூறுகளையும் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. ஆசியான் உச்சிமாநாட்டிற்காகப் பிலிப்பைன்ஸ் சென்றுள்ள அதிபர் டிரம்ப், தனது அடுத்தகட்ட சீனப் பயணத்தின்போது சர்வதேசப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்த உள்ளார்



