நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு குடோனில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து அங்கு பணியாற்றிய 4 தொழிலாளர்கள் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம் பகுதியில் ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இங்கு 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் பட்டாசு குடோனில் நேற்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் பயங்கர சப்தத்துடன் அடுத்தடுத்து வெடித்து சிதறியது. இதனால் அவை வைக்கப்பட்டிருந்த குடோன், அறை முற்றிலும் இடிந்து விழுந்தது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.
மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடந்தன. இந்த விபத்தில் பட்டாசு குடோன் உரிமையாளர் ராஜா, அவரது மனைவி சந்தியா ஆகியோர் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


