ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினம் நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், வீட்டுப் பாடம் செய்யவில்லை என்பதற்காக ஆசிரியை கன்னத்தில் அடித்ததில், 6 வயது சிறுவன் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒன் டவுன் பகுதியில் இயங்கி வரும் ‘லிட்டில் கார்டன்’ தனியார் பள்ளியில், ukg வகுப்பில் படித்து வந்த பிரணாய் தேஜ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்த மாணவனாவான்.
வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின்படி, சிறுவன் கையில் ஸ்லேட்டைப் பிடித்துக் கொண்டு பயத்துடன் வரிசையில் நின்று ஆசிரியையிடம் கெஞ்சும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், ஆசிரியை அந்தச் சிறுவனை அருகில் இழுத்துக் கன்னத்தில் ஓங்கி அடித்த சில விநாடிகளிலேயே, சிறுவன் நிலைகுலைந்து ஆசிரியை மீதே சுருண்டு விழுந்துள்ளான். பதற்றமடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாகச் சிறுவனை மீட்டு கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்குக் (KGH) கொண்டு சென்ற போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்துடன் வழிபாட்டுச் தலங்களுக்குச் சென்றுவிட்டு முந்தைய நாள் இரவே திரும்பியதால் சிறுவனால் வீட்டுப் பாடத்தை முடிக்க முடியவில்லை என்றும், ஆரோக்கியமாக இருந்த தங்களது மகனுக்கு உடனடியாக எவ்விதத் தகவலும் தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகமே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகச் சிறுவனின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். சிறுவன் பயத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படும் நிலையில், உடற்கூறாய்வு அறிக்கைக்குப் பிறகே உயிரிழப்பிற்கான உண்மையானக் காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்தத் தகவல் பரவியதும் சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி வளாகம் மற்றும் மருத்துவமனை முன்பாகத் திரண்டு, கொடூரமாக நடந்து கொண்ட ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அம்மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் இச்சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.



