
சுவிஸ் ஆர்காவ் (Aargau) மாநிலத்தில் விபத்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 16 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் சுவிஸ் வாழ் தமிழர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரப் பதப்படுத்தும் நிறுவனத்தில் Forklift எனப்படும் பாரந்தூக்கி வாகனம் தொடர்பான விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
குடும்பத்தினர் நிறுவனத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டு
விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடியாத குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
ஆர்காவ் (Aargau) மாகாணத்தின் லீப்ஸ்டாட் (Leibstadt) பகுதியில் உள்ள ஒரு மரவேலை நிறுவனத்தில், புதன்கிழமை அன்று நிகழ்ந்த பணியிட விபத்தில் 16 வயது பயிற்சி ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுவிஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து மாகாணக் காவல்துறையினரும் அரசு வழக்கறிஞர் அலுவலகமும் விசாரணை நடத்தி வருகின்றதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.



